திராவிடக் கட்சிகளுக்கு மாற்று பாஜகதான்: தென்சென்னை பாஜக வேட்பாளர்- தமிழிசை சௌந்தரராஜன்!

நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்று மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கும் என பாஜக தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதே நேரத்தில் அனைத்துக் கருத்துக்கணிப்புகளும் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் கூறிவருகின்றது.

இம்முறை தமிழகத்தில் உள்ள அனைத்து இடங்களிலும் வெற்றியைப் பெற தமிழக பாஜக கடும் முயற்சி எடுத்து வருகிறது. இதில், கட்சியின் முன்னாள் தலைவரான தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா ஆளுநர் – புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டுத் தென் சென்னை தொகுதியில் களம் காண்கிறார். அவருடனான உரையாடலின் சில பகுதிகள்…

அதிமுக கூட்டணி இல்லாமல் இந்த முறை பாஜக போட்டியிடுகிறது. இது எந்த வகையில் பாஜக கூட்டணிக்குச் சாதகமாக இருக்கும்?

திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணி இல்லாத புதிய அரசியல் மாற்றம் ஏற்பட வேண்டும் என தமிழக மக்கள் விரும்புகிறார்கள். பாஜகவும் இத்தேர்தலில் மாற்றத்தைத்தான் முன்னிறுத்தியுள்ளது. மாற்றத்தை எதிர்பார்க்கும் தமிழக மக்களின் எண்ண அலைகள் சரியாக இருப்பதால் பாஜக கூட்டணிக்குச் சாதகமான வாய்ப்புகளே உள்ளன.

2019 தேர்தலில் அதிமுகவும் பாஜகவும் இணைந்து போட்டியிட்டபோதே புதுச்சேரி உட்பட 39 தொகுதிகளில் வெற்றி பெற்றது திமுக அணி. இந்த முறை நீங்கள் தனித்தனி அணியாக நிற்கும் நிலையில் வெற்றிவாய்ப்பு எப்படி?

இரண்டு திராவிடக் கட்சிகளின் மீதும் மக்கள் வெறுப்பில் இருக்கிறார்கள்; மாற்றத்தை விரும்புகிறார்கள். 1967இல் ஒரு தேசியக் கட்சியிடம் இருந்து, ஒரு மாநிலக் கட்சி எப்படிப் பலம் பெற்றதோ, அதேபோல 2024இல் மாநிலச் சக்திகளிடம் இருந்து, ஒரு தேசிய சக்தி பலம்பெறும். திராவிடக் கட்சிகளைத் தாண்டி, தமிழகத்தில் ஒரு தேசிய சக்தி வளர்ந்துகொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு வெள்ள நிவாரணத்தில் பாரபட்சம், வரிப் பணத்தில் மிகக் குறைந்த பங்கு போன்ற விமர்சனங்கள் மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக திமுக கூட்டணிக் கட்சிகளால் முன்வைக்கப்படுகின்றன. இதற்கு பாஜகவின் பதில் என்ன?

இது அடிப்படை ஆதாரமற்றது. பிரதமர் மோடியின் ஆட்சியில் மட்டுமே மத்தியக் குழுவினர் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்ட மாநிலங்களை உடனடியாகப் பார்வையிடுகின்றனர். பிரதமராக மோடி பதவியேற்ற பிறகே மாநிலங்களுக்கு ஒதுக்கப்படும் வெள்ள நிவாரணத் தொகை அதிகரிக்கப்பட்டது. மாநிலங்களுக்கு வரிப் பங்கீடு விகிதாச்சாரம் என்பதும் இன்று உருவாக்கப்பட்டது அல்ல; காலம்காலமாகத் தொடர்ந்துவருவது. மத்தியில் திமுக ஆதரவுக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, வரிப் பங்கீட்டில் இதே முறைதான் வழக்கத்தில் இருந்தது.

ஆகவே, மோடி அரசைத் தவறாகச் சித்தரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இவ்வாறான பொய்க் குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் வைக்கின்றன. இந்தப் பொய்ப் பிரச்சாரத்தை மக்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள்.

இந்தத் தேர்தலைத் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக பாஜக கருதுகிறதா?

இல்லை. எங்களைப் பொறுத்தவரை இதை நாடாளுமன்றத் தேர்தல் என்ற கண்ணோட்டத்திலேயே எதிர்கொள்கிறோம். எங்கள் பிரதமர் வேட்பாளர் பெயரை வெளிப்படையாகத் தெரிவிக்க முடியும். இ.ண்.டி. கூட்டணிக் கட்சிகளால் தங்கள் பிரதமர் வேட்பாளர் யார் எனத் தெரிவிக்க முடியுமா? 

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டுக்கு மத்திய பாஜக அரசு வழங்கியுள்ள நேரடித் திட்டங்கள் என்னென்ன?

மத்திய அரசின் திட்டங்களால் பிற மாநில மக்கள் பலனடைந்ததைப் போல் தமிழ்நாட்டு மக்களும் பலனடைந்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, பெண் குழந்தைகளைப் பாதுகாக்க, ‘செல்வ மகள் சேமிப்புத் திட்ட’த்தை மத்திய அரசு நாடு முழுவதும் கொண்டுவந்தது.

இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களைவிடத் தமிழகத்தில்தான் இத்திட்டத்தில் அதிகமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ‘ஜல் ஜீவன்’ திட்டம் மூலம் தமிழகத்தில் வீட்டுக்கு வீடு குடிநீர் கொண்டுசெல்லப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 14 மருத்துவக்கல்லூரிகளைக் கொண்டு வந்ததில் மோடி அரசின் பங்கிருக்கிறது.

திருநெல்வேலி, மதுரை, திருச்சி மருத்துவக் கல்லூரிகளில் ரூ.200 கோடி மதிப்பில் சிறப்பு மருத்துவமனைக் கட்டிடத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசுதான் கொண்டுவந்தது. கிண்டியில் மத்திய அரசின் நிதியில் தேசிய முதியோர் நல மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இவை தவிர, ஆயுஷ்மான் பாரத் திட்டம், வந்தே பாரத் ரயில் திட்டம், சென்னை, திருச்சியில் பன்னாட்டு விமான தளம் என ஏராளமான வளர்ச்சித் திட்டங்களைத் தமிழகத்தில் பாஜக செயல்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக தலைவராக இருந்து, பின்னர் இரண்டு மாநில ஆளுநராகப் பொறுப்பு வகித்து, தற்போது ஒரு வேட்பாளராக மீண்டும் தேர்தலில் களம் இறங்குவதைப் பற்றி?

என்னுடைய வயதுக்கு இன்னும் 15 ஆண்டுகளுக்குக்கூட நான் ஆளுநராக இருக்கலாம். ஆனால், நேரடி மக்கள் தொடர்பு, சேவைக்கு வாய்ப்பு இருக்காது. நேரடி மக்கள் ஆதரவோடு மக்கள் பிரதிநிதி ஆகவில்லையே என்ற ஆதங்கம் என மனதில் எப்போதும் உண்டு.

அதற்காகத்தான் இந்தக் கடினமான முடிவை எடுத்திருக்கிறேன். ஆளுநராகப் பாதுகாப்பு வசதிகளுடன் இருந்த நான், தற்போது சாலையோரக் கடைகளில் உணவு அருந்துகிறேன். சுகபோக வாழ்க்கையை விட்டுவிட்டு, மக்களுக்காகச் சேவை செய்வதுதான் எனது முக்கியக் குறிக்கோள்.

அண்மையில் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்ட எல்.முருகனும் மக்களவைக்குப் போட்டியிடுகிறார். தமிழக பாஜகவில் செல்வாக்குமிக்க முகங்கள் இல்லாததுதான் இதற்குக் காரணமா?

இந்தத் தேர்தலில் திமுகவின் 50% வேட்பாளர்கள் தலைவர்களின் வாரிசுகளே. ஆனால், நாங்கள் மக்கள் தலைவர்களாக இத்தேர்தலை எதிர்கொள்கிறோம். நாங்கள் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து படிப்படியாக உயர்ந்து பிரபலமடைந்திருக்கிறோம். வயது, அரசியல் பேதமின்றி அனைவருக்கும் பாஜகவில் வாய்ப்பு
வழங்கப்படுகிறது.

மத்திய அரசின் திட்டங்களில் தென் மாநிலங்கள் வஞ்சிக்கப்படுகின்றன என விமர்சிக்கப்படுகிறதே?

ஏராளமான ரயில்வே திட்டங்கள் தென் மாநிலங்களுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன. ஆளுநராக நானே புதுச்சேரி-கடப்பா, புதுச்சேரி-ஆந்திரம் போன்ற பல்வேறு ரயில் திட்டங்களைத் தொடங்கிவைத்திருக்கிறேன். திமுக ஆதரவுக் கூட்டணி, மத்தியில் ஆட்சியில் இருந்தபோது எய்ம்ஸ் மருத்துவமனையைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவர என்ன முயற்சி செய்தார்கள்? ஆனால், பாஜக அதற்கான முயற்சியில் இறங்கியது.

எய்ம்ஸ் போன்ற உலகத் தரம் வாய்ந்த திட்டங்கள் வந்தடைய கொஞ்சம் காலதாமதம் ஏற்படலாம். தற்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் கள் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் படித்துக்கொண் டிருக்கிறார்கள். இன்னும் மூன்று வருடங்களில் மதுரைக்கு எய்ம்ஸ் வந்துவிடும்.

தென் சென்னை மக்களுக்கு நீங்கள் அளிக்கும் வாக்குறுதிகள் என்னென்ன?

நான் ஆளுநராக இருந்தபோது ராஜ்பவனில் புகார் பெட்டி வைக்கும் நடைமுறையைக் கொண்டுவந்தேன். இந்த நடைமுறையைத் தென் சென்னை சட்டமன்ற அலுவலகங்களிலும் செயல்படுத்துவேன்.

சென்னை வெள்ளத்தின்போதுகூட நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மக்களைச் சந்திக்கவில்லை. நான் தேர்ந்தெடுக்கப் பட்டால், குறிப்பிட்ட நாள்களில் மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிவேன். இதுவே எனது முதல் வாக்குறுதி.

இரண்டாவது – வட சென்னைக்கு ஸ்டான்லி மருத்துவமனை, மத்திய சென்னைக்கு ராஜிவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை போல் தென் சென்னைக்கு சோழிங்கநல்லூரில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை கொண்டுவர முழு முயற்சிகளில் ஈடுபடுவேன்.

தேர்தல் பிரச்சாரத்தில் நீங்கள் பிரதானமாக முன்னிறுத்தும் விஷயங்கள் என்னென்ன?

மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். அப்போதுதான் இந்தியா இதே வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து பயணிக்கும். அதற்கு மத்திய அரசின் நலத் திட்டங்களை மக்களிடம் கொண்டுசெல்வோம். இந்தியாவின் நலனுக்கு மோடி உத்தரவாதம் என்றால், தென் சென்னை நலனுக்குத் தமிழிசையாகிய நான் உத்தரவாதம் என்பதை மக்களுக்கு உணர்த்துவோம்.

நன்றி இந்து தமிழ்திசை

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top