மீனவர் பிரச்னையில் திமுகவும் காங்கிரஸும் நீலிக் கண்ணீர் வடிக்கிறது. மீனவர்கள் யாரும் திமுக, காங்கிரஸை ஒரு போதும் நம்பத் தயாராக இல்லை… என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே வாசன் பேசியுள்ளார்.
ஜி.கே.வாசன் சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழக நிறுவனர் தேவநாதன் யாதவை ஆதரித்து த.மா.கா தலைவர் ஜி.கே வாசன் பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, ‘‘மீனவர்களின் வாழ்வாதாரம் உயர உயர இந்திய நாட்டின் பொருளாதாரமும் உயரும். கச்சத்தீவுப் பிரச்னையில் காங்கிரஸ் தலைமையிலான அரசு வரலாற்று பிழை செய்தது. அதற்கு திமுக துணை போனது.
மீனவர் பிரச்னையில் திமுக-வும் காங்கிரஸும் நீலிக் கண்ணீர் வடிக்கிறது. மீனவர்கள் யாரும் திமுக, காங்கிரஸை ஒரு போதும் நம்பத் தயாராக இல்லை. மூன்றாவது முறையாக மோடி அரியணை ஏறும்போது இந்தியா வல்லரசாக மாறும். அப்போது கச்சத்தீவை மீட்பது முக்கிய முடிவாக இருக்கும்.
பெண்களுடைய முன்னேற்றம் இந்தியாவின் முன்னேற்றம் என பிரதமர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். திமுக அரசு மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு ஒரு லட்ச ரூபாய் கொடுத்தது போல ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
2026-ல் திமுக அரசு நீடிக்க கூடாதென்றால் இப்போது தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.