முதல்வர் ஸ்டாலினை நோக்கி மக்கள் கேட்கும் 4 கேள்விகள்: வானதி சீனிவாசன்!

இந்தியாவுக்கு சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தவர் இந்திரா காந்தி, அதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தது அப்போது இருந்த திமுக அரசு என பாஜக தேசிய மகளிரணி தலைவரும் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்;

இந்தியாவுக்கு சொந்தமான கச்சத் தீவை இலங்கைக்கு தாரை வார்த்தவர் இந்திரா காந்தி, அதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தது அப்போதிருந்த திமுக அரசு. இன்று தமிழ்நாட்டு மீனவர்கள் அனுபவிக்கும் அத்தனை துயரங்களுக்கும் கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டதே காரணம்.

வெளிநாட்டுக்கு ஒரு இடத்தை கொடுத்து விட்டால் அதை மீட்பது என்பது எளிதல்ல. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. மகாத்மா காந்தியின் அகிம்சை வழியில்தான் அனைத்தையும் மேற்கொள்ள வேண்டும் என்ற கொள்கையில் உறுதியுடன் இருக்கும் நாடு.

இது தெரிந்தும் தூங்குவது போல நடித்துக் கொண்டிருக்கும் தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு மூன்று கேள்விகள் கேட்டிருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலினை நோக்கி மக்கள் கேட்கும் 4 கேள்விகள்,

1. 2004 முதல் தொடர்ந்து 10 ஆண்டுகள் மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது, தமிழ்நாடு வரியாக தந்த ஒரு ரூபாய்க்கு, மத்திய காங்கிரஸ் திமுக கூட்டணி அரசு திருப்பித் தந்தது எத்தனை பைசா?

2. மக்கள் தொகை அதிகம் உள்ள உத்தரப்பிரதேசம், பீஹார், மேற்குவங்க மாநில மக்களுக்கு உதவக் கூடாது என்பதுதான் இ.ண்.டி. கூட்டணியின் நிலைப்பாடா?

3. மத்திய அரசில் திமுக அங்கம் வகித்தபோது தமிழகத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களுக்கு அன்றைய மத்திய அரசு கொடுத்த நிவாரண நிதி எவ்வளவு?

4. நெடுஞ்சாலைகள், விரைவுச் சாலைகள், மேம்பாலங்கள், அதிவிரைவு ரயில்கள், புதிய ரயில் பாதைகள், புதிய விமான நிலையங்கள், துறைமுக மேம்பாடு என 1998 – 2004 வாஜ்பாய் ஆட்சியிலும், கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியிலும் மேற்கொள்ளப்பட்ட உள்கட்டமைப்பு திட்டங்கள்தான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தன. இதை யாராலும் மறுக்க முடியுமா? பதில் சொல்லுங்கள் ஸ்டாலின் என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top