33 மாதகால திமுகவின் ஆட்சியில் லஞ்சம், ஊழல், கமிஷனால் தமிழகம் தத்தளிக்கிறது: திருப்பூரில் அண்ணாமலை!

கடந்த 33 மாத கால ஆட்சியில், லஞ்சம், ஊழல், கமிஷன் என தமிழகம் முழுவதுமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது என திருப்பூரில் நடைபெற்ற பிரச்சாரத்தில் தலைவர் அண்ணாமலை பேசினார்.
திருப்பூர் பாஜக வேட்பாளராக ஏ.பி.முருகானந்தம் போட்டியிடுகிறார். அவருக்காக தலைவர் அண்ணாமலை இன்று காலை (ஏப்ரல் 04) திருப்பூர் பாராளுமன்றத் தொகுதியில், கவுந்தப்பாடி பகுதியில் தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது:

திருப்பூர் பாராளுமன்றத் தொகுதியின் ஆறு சட்டமன்றத் தொகுதிகளையும் அடையாளப்படுத்தி வேட்புமனு தாக்கல் செய்த வெற்றி வேட்பாளர் அண்ணன் ஏ.பி.முருகானந்தம் அவர்கள். கிராமப் பகுதி மக்களை முன்னேற்ற வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டவர். திருப்பூர் பாராளுமன்றத் தொகுதிக்கு, நூறு தேர்தல் வாக்குறுதிகள் வழங்கியுள்ளார். அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்த நூறு வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றி, திருப்பூர் பாராளுமன்றத் தொகுதியின் வளர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருப்பார். திருப்பூர் குமரிக்கல் பாளையத்தில் உள்ள 2000 ஆண்டுகள் பழமையான நடுகல் பகுதிகளை, பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்க, நடவடிக்கைகள் மேற்கொள்வார் என்பதும் உறுதி.

வரும் பாராளுமன்றத் தேர்தலில், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 400 இடங்களுக்கும் மேல் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமர் பொறுப்பேற்கவிருப்பது உறுதி. நமது பிரதமர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையிலான எண்ணங்களை, மக்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டியதுதான் பாராளுமன்ற உறுப்பினர்களின் பணி. ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக, திருப்பூரின் வளர்ச்சிக்கு எந்தப் பணிகளும் செய்யாமல், கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணித்து வருகிறது. திருப்பூரின் வளர்ச்சி தேங்கி நிற்கிறது. எனவே, நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் எண்ணங்களைச் செயல்படுத்தும், பட்டி தொட்டியெல்லாம் வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு செல்லும் பாராளுமன்ற உறுப்பினர் நமக்குத் தேவை. அப்போதுதான், திருப்பூர் வளர்ச்சி பெறும்.

நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆட்சியில் நமது நாட்டின் பொருளாதாரம் உலகின் 11 ஆவது இடத்திலிருந்து, ஐந்தாவது இடத்திற்கு உயர்ந்திருக்கிறோம். அடுத்த ஐந்து ஆண்டுகளில், மூன்றாவது இடத்தைப் பிடிப்போம். நமது பிரதமர் அவர்கள் தலைமையிலான மத்திய அரசில், 76 அமைச்சர்களில் 11 அமைச்சர்கள் பெண்கள். 12 அமைச்சர்கள், பட்டியல் சமூக சகோதர சகோதரிகள். 27 அமைச்சர்கள் பிற்படுத்தப்பட்ட சகோதர சகோதரிகள். இதுதான் உண்மையான சமூக நீதி. நமது பிரதமர் மோடி அவர்கள் ஆட்சியில், கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தலின்போது கொடுத்த 295 வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றியிருக்கிறோம். திமுகவோ, கம்யூனிஸ்ட்டுகளோ, 2019 ஆம் ஆண்டு கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறார்களா?
தொழில்துறையை முன்னேற்ற, பாஜக உழைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், திமுகவுக்கு, கோபாலபுர குடும்ப முன்னேற்றம் மட்டுமே நோக்கமாக இருக்கிறது. கடந்த 33 மாத கால ஆட்சியில், லஞ்சம், ஊழல், கமிஷன் என தமிழகம் முழுவதுமே தத்தளித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சி குறைந்து கொண்டிருக்கிறது. வெளி நாட்டு முதலீடு என்று கூறி, சிங்கப்பூர், துபாய், ஜப்பான், ஸ்பெயின் என்று சுற்றுலா சென்ற முதலமைச்சர், ஒரு ரூபாய் கூட முதலீடு கொண்டு வரவில்லை. நிலைக்கட்டணம், சூரிய ஒளி மின்சாரக் கட்டணம், பீக் அவர் கட்டணம் என, பல படிகளில் மின்சாரக் கட்டணத்தை உயர்த்தி, தொழில் துறையை முடக்கி இருக்கிறது திமுக. 33 மாதங்களாக, விடியல் என்ற பெயரில், நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

வரும் பாராளுமன்றத் தேர்தல், நாட்டுக்கான தேர்தல். நாட்டின் பாதுகாப்புக்கான, நாட்டின் இறையாண்மையைக் காப்பாற்றுவதற்கான தேர்தல். இந்தத் தேர்தலில், கடந்த 33 மாதங்களாக, தமிழகத்தின் வளர்ச்சியை முடக்கியிருக்கும் திமுகவுக்கு வாக்களிப்பது என்பது எந்தப் பலனையும் தரப்போவதில்லை. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற முடியாத திமுகவால் எப்படி, நாட்டின் பாதுகாப்பை, நமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும்?

நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அமைச்சரவையில், 76 அமைச்சர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒருவர் மீதும், ஒரு குண்டூசியைத் திருடியதாகக் கூட ஊழல் குற்றச்சாட்டு கூற முடியாது. ஆனால், திமுகவில், ஒரு குண்டூசியை கூட விட்டு வைக்காமல் ஊழல் நடக்கிறது. பொங்கலுக்கு வழங்கும் இலவச வேட்டி சேலைகளில் கூட ஊழல் நடந்திருப்பதை, ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளோம். நாட்டின் வளர்ச்சிக்கு யார் தேவை என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

கடந்த 33 மாத திமுக ஆட்சியில், தமிழகத்தின் கிராமப் பகுதிகள் வரை போதைப் பொருள்கள் புழக்கம் பரவியிருப்பதுதான் திமுகவின் சாதனை. போதைப் பொருள் விற்பவர்கள், திமுகவின் அத்தனை தலைவர்களுடனும் நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். இதனை மடைமாற்ற, மத்திய அரசு தமிழகத்துக்கு நிதி கொடுக்கவில்லை என்று பொய் கூறிக் கொண்டிருக்கிறார்கள். சமையல் எரிவாயு மானியம், பிரதமரின் வீடு, குழாயில் குடிநீர், முத்ரா கடனுதவி, விவசாயிகளுக்கு வருடம் ரூ.6,000 கௌரவ நிதி என்று, மக்களுக்கு நேரடியாக நமது பிரதமர் வழங்கிக் கொண்டிருக்கிறார். கோபாலபுரத்துக்கு மத்திய அரசு நிதி கொடுத்தால் என்ன ஆகும் என்பது மக்களுக்குத் தெரியாதா?

பாராளுமன்ற மையக் கட்டிடத்தில் செங்கோல், திருக்குறளை உலகம் முழுவதும் கொண்டு செல்வது என, நமது தமிழ் மொழிக்கும், நமது கலாச்சாரத்துக்கும், இதுவரை யாரும் கொடுக்காத முக்கியத்துவத்தையும் அங்கீகாரத்தையும், நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான் வழங்கியுள்ளார். தொடர்ந்து, தமிழ் மொழியின் பெருமையை, செல்லுமிடமெல்லாம் போற்றுகிறார் நமது பிரதமர். மேலும், நமது பிரதமர் ஆட்சியில்தான், சாமானிய மக்களுக்கான மரியாதையும் அங்கீகாரமும் கிடைக்கிறது. எளிய மக்களைத் தேடி, உயரிய பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. பிரதமரின் மனதின் குரல் நிகழ்ச்சியில், சாமானிய கிராமப்புற மக்கள் நாடு முழுவதும் அறியப்படுகிறார்கள்.

எதிர்க்கட்சிக் கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்பதே தெரியவில்லை. ஆனால், கடந்த பத்து ஆண்டுகள் ஊழலற்ற நல்லாட்சியின் மூலம் தம்மை நிரூபித்திருக்கிறார் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். எனவே, வரும் ஏப்ரல் 19 பாராளுமன்றத் தேர்தலன்று, நமது பிரதமர் கரங்களை வலுப்படுத்த, திருப்பூருக்குச் சேவை செய்யும் வாய்ப்பினை, உங்கள் வீட்டுப் பிள்ளை, அண்ணன் ஏ.பி.முருகானந்தம் அவர்களுக்கு வழங்க வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன். சாமானிய மக்களின் சின்னம், இளைஞர்களின் சின்னம், தாய்மார்களின் சின்னம், வளர்ச்சியின் சின்னம், அடுத்த தலைமுறையின் சின்னம், நமது பாரதப் பிரதமரின் சின்னமாம் தாமரை சின்னத்தில், கட்சி வேறுபாடின்றி வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தலைவர் அண்ணாமலை பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top