‘‘பா.ஜ.க. நிச்சயம் சொல்வதை செய்யும். மற்ற கட்சிகளை போல வெறும் தேர்தல் அறிக்கையை மட்டும் வெளியிட மாட்டோம். தீர்மான அறிக்கையாக வாக்குறுதி வழங்குவோம்,’’ என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.
ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
ஒட்டுமொத்த ராஜஸ்தானும் ‘மீண்டும் மோடி அரசு’ என முழக்கமிடுகிறது. இந்தியா எப்படி இவ்வளவு வேகமாக வளர்ச்சியடைகிறது என மொத்த உலகமும் ஆச்சரியமாக பார்க்கிறது. இந்திய மண் கொஞ்சம் வித்தியாசமானது என உலக நாடுகளுக்கு தெரியாது. நம்மால் என்ன முடிவெடுத்தாலும் அதனை சாதிக்க முடியும்.
கடந்த 10 ஆண்டுகளில், நாடு மாற்றமடைவதை நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். 10 வருடங்களுக்கு முன் நாட்டின் நிலை எவ்வளவு மோசமாக இருந்தது நினைவிருக்கிறதா? காங்கிரஸின் பெரிய ஊழல்கள் மற்றும் கொள்ளையினால், பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, உலகளவில் இந்தியாவின் நற்பெயர் சரிந்தது. நாங்கள் நேர்மையாக வேலை செய்தோம். கோவிட் போன்ற ஒரு பெரிய நெருக்கடி வந்தபோது, இந்தியா அழிந்துவிடும் என நினைத்தனர். ஆனால் அந்த நெருக்கடியிலும் உலகின் 5வது பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றினோம்.
இதுவரை நாங்கள் செய்த வளர்ச்சி பணிகள் எல்லாம் வெறும் டிரைலர் மட்டும்தான். பா.ஜ.க., நிச்சயம் சொல்வதை செய்யும். மற்ற கட்சிகளை போல வெறும் தேர்தல் அறிக்கையை மட்டும் வெளியிட மாட்டோம். தீர்மான அறிக்கையாக வாக்குறுதி வழங்குவோம். 2019ல் நாங்கள் அளித்த பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. முத்தலாக் தடை சட்டம் இஸ்லாமிய சகோதரிகளுக்கு உதவியாக இருக்கிறது. மோடி உங்களை மட்டும் காப்பாற்றவில்லை, ஒவ்வொரு இஸ்லாமிய குடும்பத்தையும் மோடி பாதுகாத்துள்ளார்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.