கோவை பாராளுமன்றத் தொகுதியில் விவசாயத்தையும், விசைத்தறி தொழிலையும் நொடித்துப் போகாமல் காப்பாற்ற, மத்திய அரசின் நிதியுதவியுடன் தொகுதியில், நீர் மேலாண்மை, சோமனூர் ஜவுளிப் பூங்கா உள்ளிட்டவற்றைக் கொண்டு வருவோம் என்ற உறுதி அளிக்கிறேன் என தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
கோவை பாராளுமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளராக தலைவர் அண்ணாமலை களம் காண்கிறார். இவருக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் ஆதரவு பெருகிறது. இதற்கிடையே நேற்று (ஏப்ரல் 05) இரவு சூலூர் சட்டமன்றத் தொகுதியில் தாமரை சின்னத்திற்கு அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.
அப்போது பொதுமக்கள் மத்தியில் அவர் பேசியதாவது: கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சூலூர் சட்டமன்றத் தொகுதியில், தொட்டிப்பாளையம், மாதப்பூர், முத்துக்கவுண்டன்புதூர், முதலிபாளையம், நீலம்பூர் உள்ளிட்ட பகுதிகளில், தாய்மார்கள், இளைஞர்கள் என அனைவரும் எழுச்சியுடன் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டங்களில், தேசிய ஜனநாயகக் கூட்டணி நிர்வாகிகளுடன் பங்கேற்று, தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகிறேன்.
மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், வரும் பாராளுமன்றத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்பது உறுதி. நாடு முழுவதும், 400 பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால், நாட்டின் நலனுக்காக தைரியமான முடிவுகளைத் துணிந்து எடுக்க முடியும். உதாரணமாக, நதிநீர் இணைப்பு போன்ற திட்டங்களை, முழுமையாகச் செயல்படுத்த முடியும். மேலும், பாரதப் பிரதமர் கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை முழுமையாக நமது தொகுதிக்கும் செயல்படுத்த, ஆளுங்கட்சி சார்பான பாராளுமன்ற உறுப்பினர் நமது தொகுதிக்கும் தேவை. இத்தனை ஆண்டுகளாக, திமுக, அதிமுக கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்தாமல் இருந்ததால், நமது தொகுதியின் வளர்ச்சி தேங்கிவிட்டது.
சூலூர், சோமனூர் பகுதி, இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கியமானது. இந்தியாவின் 40% முதல் 50% வரையிலான விசைத்தறிகள், இந்தப் பகுதியில்தான் இருக்கிறது. எனவே இந்தப் பகுதியின் வளர்ச்சி, நமது பாரதப் பிரதமர் அவர்களது நேரடிக் கண்காணிப்பில் இருக்க வேண்டும். தொகுதியில் விவசாயத்தையும், விசைத்தறி தொழிலையும் நொடித்துப் போகாமல் காப்பாற்ற, மத்திய அரசின் நிதியுதவியுடன் தொகுதியில், நீர் மேலாண்மை, சோமனூர் ஜவுளிப் பூங்கா உள்ளிட்டவற்றைக் கொண்டு வருவோம் என்ற உறுதி அளிக்கிறேன். மேலும், கும்பகோணத்திற்கு அடுத்தபடியாக, கோவில்கள் நிறைந்த மாதப்பூர் பகுதி கோவில்கள் அனைத்தையும் இணைத்து, ஆன்மீகச் சுற்றுலா திட்டங்களைக் கொண்டு வந்து, இந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவோம். நொய்யல் நதி, கவுசிகா நதி இரு நதிகளையும் மேம்படுத்த, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ள 990 கோடி நிதி, முழுமையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்து, நொய்யல் நதியை மீட்டெடுப்போம்.
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், தனது வாழ்க்கையை நமது நாட்டுக்காக அர்ப்பணித்திருக்கிறார். கடந்த பத்து ஆண்டுகளில், நேர்மையான, ஊழலற்ற நல்லாட்சி வழங்கி, நமது நாட்டை உலக அரங்கில் முன்னேற்றியிருக்கிறார். நமது நாடு இன்னும் வேகமாக வளர, அடுத்த 25 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை அமைக்கவிருக்கும் தேர்தல் இது. நமது பாரதப் பிரதமர் கரங்களை வலுப்படுத்த, நமது கோவையும் துணையிருக்க வேண்டும். கோவையின் பாராளுமன்ற உறுப்பினராக, உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் சகோதரன், அண்ணாமலையாகிய என்னை, கட்சி வேறுபாடின்றி, தாமரை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நமது குழந்தைகளின் அடுத்த 25 ஆண்டுகளுக்கான எதிர்காலத்தை சிறப்பானதாக்க, தரமான கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, உள்ளிட்டவை நமது குழந்தைகளுக்குக் கிடைப்பதை, கோவையின் பாராளுமன்ற உறுப்பினராக, நமது பாரதப்பிரதமர் அவர்கள் உதவியுடன், ஒரு ரூபாய் லஞ்ச ஊழல் இல்லாமல், நிச்சயம் உறுதி செய்வேன் என்ற வாக்குறுதியை அளிக்கிறேன்.
இவ்வாறு தலைவர் அண்ணாமலை பேசினார்.