வரும் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றியை தடுப்பதற்கான வாய்ப்பை எதிர்க்கட்சிகள் தவறவிட்டுவிட்டதாக பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகம், ஒடிசா, தெலங்கானாவில் பாஜகவுக்கு கணிசமான இடம் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நேற்று (ஏப்ரல் 07) அளித்த பேட்டியில் கூறியதாவது:
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை வீழ்த்த முடியாது. பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்ட போதெல்லாம் அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சி தவறிவிட்டது.
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு 2017 மார்ச் மாதம் நடந்த உத்தர பிரதேசம் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. அதே ஆண்டின் டிசம்பரில் நடந்த குஜராத் தேர்தலில் பாஜக வெற்றியை பெற்று ஆட்சியை தக்கவைத்தது.
இதையடுத்து கடந்த 2018 டிசம்பரில் நடந்த மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக தோல்வி அடைந்தது. ஆனாலும் எதிர்க்கட்சிகள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடந்ததால், இந்த முடிவுகள் வெளியான 5 மாதங்களுக்குப் பிறகு 2019-ல் நடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 2014-ல் பெற்றதை விட மிகப்பெரிய வெற்றியைப்பெற்றது. 2020-ம் ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவியது.
அதன் பிறகு 2021-ல் நடந்த மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றியை பெற்றது. பாஜகவின் தொடர் வெற்றியைத் தடுப்பதற்கு கிடைத்த வாய்ப்பை எல்லாம் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து தவறவிட்டு வருகின்றன. கிரிக்கெட் போட்டியில் பீல்டர்கள் கேட்சை தவறவிட்டால் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பவர் சதம் அடிக்கத்தான் செய்வார். இதுபோன்றதுதான் அரசியலும்.
ஆனாலும் வரஉள்ள தேர்தலில் 300 இடங்களுக்கும் மேல் பாஜக வெற்றி பெறும். மேலும் சமீப காலமாக பாஜக வளர்ந்து வரும் மாநிலங்களான ஒடிசா, தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் மேற்கு வங்கத்தில் இந்த முறை பாஜகவிற்கு கூடுதலான இடங்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.