கோவையில் தண்ணீர் பிரச்சினை நிலவுகிறது: தலைவர் அண்ணாமலை!

கோவை தொகுதி முழுக்க தண்ணீர்ப் பிரச்சினை நிலவுகிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் இருந்த கோவையில் இன்று சிறுவாணி தண்ணீர் வாரம் ஒரு முறைதான் கிடைக்கும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது, என தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்,

இன்று காலை (ஏப்ரல் 08) கோயம்புத்தூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, விநாயகபுரம், சிவானந்தபுரம், சின்னவேடம்பட்டி, அஞ்சுகம் நகர் பகுதிகளில், நடைபெற்ற பிரச்சாரக் கூட்டங்களில், தேசிய ஜனநாயகக் கூட்டணி நிர்வாகிகளுடன் தலைவர் அண்ணாமலை பங்கேற்று பொதுமக்களின் பேராதரவோடு தாமரை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:

வரவிருக்கும் பாராளுமன்றத் தேர்தல், நமது நாட்டுக்கான தேர்தல். நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாகப் பிரதமர் பொறுப்பேற்கவிருப்பது உறுதி. நமது பிரதமர் அவர்கள் ஆட்சிக் காலத்தில், நமது கோயம்புத்தூர் தொகுதியும் வளர்ச்சி பெற வேண்டும். கடந்த பத்து ஆண்டுகளாகப் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், தொகுதி நலனுக்காக எந்த வளர்ச்சித் திட்டங்களையும் கொண்டு வரவில்லை. அதே நேரம், மத்திய அரசு, கொண்டு வந்த திட்டங்களையும் முழுமையாகச் செயல்படுத்தவுமில்லை.

கோவை சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக இருக்கிறது. தண்ணீர்ப் பிரச்சினை தொகுதி முழுக்க நிலவுகிறது. ஒரு காலத்தில் செழிப்புடன் இருந்த கோவையில் இன்று சிறுவாணி தண்ணீர் வாரம் ஒரு முறைதான் கிடைக்கும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. சுகாதாரத்தில், கோவை 42வது இடத்தில் இருந்து, 182வது இடத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது. வெறும் 12% குப்பைகள் மட்டுமே சுத்திகரிக்கப்படுகின்றன. கோவையின் 88% குப்பைகள், அப்படியே நகரத்தில் கிடப்பில் போடப்படுகின்றன.  ஆனால் இது குறித்து, தமிழகத்தின் ஆட்சியாளர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை.

கோவையில் சாலைகளை முதலில் சரிசெய்யாமல், கிரிக்கெட் ஸ்டேடியம் அமைப்போம் என்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். பாஜக, ஒவ்வொரு பஞ்சாயத்து தலைக்கிராமத்திலும் விளையாட்டு மைதானங்கள் அமைப்போம் என்று கொடுத்த வாக்குறுதிக்குப் பிறகுதான், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இந்த எண்ணம் வந்திருக்கிறது. நல்ல சாலைகள் அமைப்பதுதான் அரசின் வேலை. கிரிக்கெட் ஸ்டேடியத்தை, நாங்கள் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டுப் பெற்றுக் கொள்வோம்.

இந்தியாவில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு அதிக அளவு நிதி வழங்கப்பட்ட நகரங்களில் கோவையும் ஒன்று. கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்துக்கு ரூ.1,445 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த நிதியை முறையாகச் செலவிட்டிருந்தால், கோவை நகரின் நிலை இப்படியா இருக்கும்? கடந்த பத்து ஆண்டுகளாகப் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், இதனைக் கண்காணிக்கத் தவறியதன் விளைவு, அத்தனை நிதியும் எங்கே போனது என்றே தெரியவில்லை.

நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நேரடிக் கண்காணிப்பில், கோவையை மீட்டெடுக்க, விமான நிலையம், ரயில் நிலையம், தரமான சாலை வசதி, மேம்பாலங்கள் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த, கோவைக்கு பாஜகவின் பாராளுமன்ற உறுப்பினர் தேவை. நமது நாடு, அடுத்த 25 ஆண்டுகளில் வளர்ந்த பாரதமாக மாறும்போது, நமது கோவையும் அந்த வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க வேண்டும்.

கடந்த 2004 – 2014 பத்து ஆண்டுகளில், திமுக காங்கிரஸ் கூட்டணி அரசு, நமது நாட்டை எப்படி பின்னோக்கிக் கொண்டு சென்றார்கள் என்பதை நாம் அறிவோம். மீண்டும் ஒரு முறை அதே போன்ற நிலைக்கு, நம்மையும், நமது நாட்டையும் கொண்டு செல்ல முயற்சிக்கிறார்கள். இதனைத் தடுக்க, நமக்கு இருக்கும் ஒரே வலிமையான தலைவர், நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள். கடந்த பத்து ஆண்டுகள் நமது பிரதமரின் நல்லாட்சி, ஏழை மக்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் இவர்களை மையப்படுத்தி நடந்து வருகிறது. உலகப் பொருளாதாரத்தில், ஐந்தாவது இடத்தைப் பிடித்திருக்கிறோம். இன்னும் மூன்று ஆண்டுகளில், மூன்றாவது இடத்தை நமது நாடு எட்டிப் பிடிக்கும்.

அடுத்த 25 ஆண்டுகளில், உலகின் முதல் பொருளாதார நாடாக, வளர்ச்சியடைந்த பாரதமாக மாற, நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இம்முறை, 400க்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும்போது, அவரது கரங்களை வலுப்படுத்த, அவரைப் பயன்படுத்தி, நமது கோவையும் வளர்ச்சி பெற, உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் தம்பி அண்ணாமலையாகிய எனக்கு, கட்சி வேறுபாடின்றி தாமரை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தலைவர் அண்ணாமலை பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top