தமிழர் உரிமை பற்றி பேச காங்கிரஸ், திமுகவுக்கு தகுதியில்லை -ராஜ்நாத் சிங் காட்டம்!

இலங்கைக்கு கச்சத்தீவை பரிசாக கொடுத்த காங்கிரஸுக்கும், திமுகவுக்கும் தமிழர் உரிமைகள் குறித்துப் பேச தகுதியில்லை என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
நாகை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் எஸ்ஜிஎம். ரமேஷ் கோவிந்த்தை ஆதரித்து,  தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் திருவாரூர் தெற்கு வீதியில் நேற்று (ஏப்ரல் 08) பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:

பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இன்று இந்தியா உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாகவும், பொருளாதாரம் வேகமாக வளரும் நாடாகவும் மாறியுள்ளது. பிரதமராக மோடி ஆட்சிப்பொறுப்பேற்பதற்கு முன்பு ரூ.600 கோடியாக இருந்த பாதுகாப்பு தளவாடப் பொருட்களின் ஏற்றுமதி, இன்று ரூ.26 ஆயிரம் கோடியை எட்டி உள்ளது. அதுபோல் 5ஜி மொபைல் இணைப்பில் இந்தியா முன்னணியில் உள்ளது. மேலும் 6ஜி-க்கு இந்தியா தயாராகி வருகிறது. உலகிலேயே மிக மலிவான மொபைல் டேட்டா சேவை இந்தியாவில்தான் கிடைக்கிறது.

இதற்கு பிரதமர் மோடியின் நுட்பமான ஆட்சித் திறனே காரணம். இதன் காரணமாக நாட்டில் சாமானிய குடிமகன்கள் கூட சிறிய பணப் பரிவர்த்தனைகளைக் கூட டிஜிட்டல் முறையில் செய்து பயனடைந்து வருகிறார்கள். நாட்டிலேயே தமிழகத்திலும், உத்தர பிரதேசத்திலும் மட்டுமே 2 பாதுகாப்பு வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மோடி அரசில் இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை கொடுப்பவர்களாக மாற வேண்டும் என்கின்ற நோக்கத்தில் 1.25 லட்சம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ஆனாலும், நாட்டின் வளர்ச்சிக்கு காரணமாக உள்ள மோடி குறித்து அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். சேற்றை வாரி இறைக்கிறார்கள். எவ்வளவு சேற்றை வாரி இறைக்கிறார்களோ, அதே அளவுக்கு தாமரை மலரும் என்பதில் சந்தேகம் இல்லை.

இலங்கையில் தமிழர்களுக்கு நடந்த அநீதிக்கும், கச்சத்தீவு இழப்புக்கும், மீனவர் பிரச்சினைகளுக்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகள்தான் பொறுப்பு. இந்த 2 கட்சிகளும் சேர்ந்துதான் இலங்கைக்கு கச்சத்தீவை பரிசாக கொடுத்தன. இதனால் அவர்கள் தமிழர்கள், மீனவர்கள் உரிமை குறித்துப் பேச எந்தத் தகுதியும் இல்லை. தேசம் தான் முதன்மையானது என்பது எங்கள் நோக்கம். ஆனால், குடும்பம் தான் முதன்மையானது என்பது எதிர்க்கட்சியினரின் நோக்கம். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கரன், அமமுக மாவட்டச் செயலாளர் எஸ்.காமராஜ், தமாகா மாவட்டத் தலைவர் தினகரன், நாகை மக்களவைத் தொகுதி தேர்தல் குழு பொறுப்பாளர் புரட்சிகவிதாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top