கிளி ஜோதிடர் கைது : தங்கர் பச்சான் வெற்றி பெறுவார் எனக் கூறியதால் !

கடலூர் தொகுதியில் இயக்குனர் தங்கர்பச்சான் வெற்றி என்று ஜோதிடம் கூறியதால் கிளி ஜோதிடர் கைது செய்யப்பட்டிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். முட்டாள் திமுக அரசின் பழிவாங்கும் போக்குக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடலூர் மாவட்டம், தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் ஆலயம் அருகில் கிளி ஜோதிடம் பார்த்து வந்த செல்வராஜ் என்பவரை தமிழக அரசின் வனத்துறை கைது செய்திருக்கிறது. கடலூர் தொகுதியில்  போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் இயக்குனர் தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளிஜோதிடம் பார்த்து கூறியதை தாங்கிக் கொள்ள முடியாமல் தான் இந்த பழிவாங்கும் நடவடிக்கையை திமுக அரசு மேற்கொண்டுள்ளது. பாசிசத்தின் உச்சமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.

தங்கர்பச்சான் வெற்றி பெறுவார் என்று கிளி ஜோதிடர் கூறியதையே தாங்கிக் கொள்ள முடியாத திமுக அரசு, தேர்தல் முடிவு அப்படியே அமைவதை எப்படி தாங்கிக் கொள்ளும்? ஜோதிடம் கூறியதற்காக கிளி ஜோதிடரை கைது செய்த திமுக அரசு, தங்கர்பச்சானுக்கு வாக்களித்ததற்காக கடலூர்  தொகுதியைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்களை கைது செய்வார்களா? இந்த நடவடிக்கை மூலம் திமுகவின் தோல்வி பயம் அப்பட்டமாக தெரிகிறது. பகுத்தறிவு கட்சி என்று கூறிக்கொள்ளும் திமுகவால் சோதிடத்தில்  நல்ல செய்தி கூறியதைக் கூட தாங்கிக் கொள்ள முடியவில்லை என்றால் அக்கட்சி எந்த அளவுக்கு முட்டாள் தனத்திலும், மூட நம்பிக்கையிலும் ஊறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

கிளியை கூண்டில் அடைத்தது குற்றம் என்றும், அதற்காகத் தான் ஜோதிடர் செல்வராஜ் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான கிளி ஜோதிடர்கள் கிளிகளை கூண்டில் வைத்து தான் ஜோதிடம் பார்க்கிறார்கள். இப்போது கைது செய்யப்பட்ட ஜோதிடர் அதே இடத்தில் பல ஆண்டுகளாக ஜோதிடம் பார்த்து வருகிறார். அப்போதெல்லாம் அவர் கைது செய்யப்படவில்லை. மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆவாரா? என்று அவரது துணைவியார் நூற்றுக்கணக்கான ஜோதிடர்களிடம் கிளி சோதிடம் பார்த்திருப்பார்.  அந்த கிளி சோதிடர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. ஆனால், இப்போது தங்கர்பச்சானுக்கு ஜோதிடம் கூறிய பிறகு ஜோதிடர் கைது செய்யப்படுகிறார் என்றால் அதற்கான காரணத்தை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

தமிழ்நாட்டின் காடுகளில் லட்சக்கணக்கான மரங்களும், ஆயிரக்கணக்கான விலங்குகளும் அழிக்கப்படுகின்றன. அவற்றையெல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் திமுக அரசு, ஓர் ஏழை கிளி ஜோதிடரை கைது செய்து அதன் வீரத்தைக் காட்டியிருக்கிறது. அந்த ஜோதிடரின் பிழைப்பில் மண்ணைப் போட்டிருக்கிறது. இதற்குக் காரணமானவர்களுக்கு வரும் தேர்தலில்  தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top