அமலாக்கத்துறை கைதுக்கு எதிராக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு ஊழல் வழக்கில், கடந்த மார்ச் 21ம் தேதி கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இந்நிலையில், ஜாமின் கோரி கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று (ஏப்ரல் 09) விசாரணைக்கு வந்தது.
அப்போது, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதிகள் கூறியதாவது: கெஜ்ரிவாலின் கைது சட்டத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதே, தேர்தலுக்காக எடுக்கப்படவில்லை. முதல்வர் என்ற காரணத்திற்காக சிறப்பு சலுகை காட்ட முடியாது. பொது வாழ்வில் உள்ளவர்கள் சலுகைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
தேர்தல் நேரம் என்பதால் விசாரணைக்கு வர முடியாது என கெஜ்ரிவால் கூறியதை ஏற்க முடியாது. மற்றவர்களுடன் இணைந்து கெஜ்ரிவால் முறைகேடு செய்துள்ளார் என்பதை காண முடிகிறது. தேர்தல் நேரத்தை கணக்கிட்டு அமலாக்கத்துறையினர் கைது செய்ததாக கெஜ்ரிவால் கூறியதை ஏற்க முடியாது.
நீதித்துறையின் சுதந்திரம் என்பது அரசியல் தாக்கத்தில் இருந்து விலகி இருப்பது ஆகும். எனவே நீதிமன்றங்கள் அரசியல் விவகாரங்களுக்குள் செல்ல முடியாது. அமலாக்கத்துறையின் ஆதாரத்தின் படி, மதுபான கொள்கை முறைகேடு மூலம் கிடைத்த பணம் கோவா தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு நீதிபதிகள் கூறினர். இதையடுத்து சிறையில் உள்ள கெஜ்ரிவாலுக்கு ஜாமின் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.