ஊழலின் அத்தாரிட்டி திமுக; சாதி, மதத்தால் மக்களை பிளவுப்படுத்தும் திமுக: வேலூரில் பிரதமர் மோடி தாக்கு!

ஊழலின் ஒட்டுமொத்த அத்தாரிட்டியாக திமுக.,வும், அதனை வழிநடத்தும் திமுக குடும்பமும் உள்ளதாகவும், மக்கள் ஒற்றுமையாக இருந்தால் திமுக செல்லாக்காசாகிவிடும் என்பதால் மக்களை சாதி, மதத்தால் திமுக பிளவுபடுத்துகிறது என பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சித்தார்.

வேலூர் ஏ.சி.சண்முகம், திருவண்ணாமலை அஸ்வத்தாமன், தருமபுரி சௌமியா அன்புமணி, கிருஷ்ணகிரி நரசிம்மன், அரக்கோணம் பாலு, ஆரணி கணேஷ்குமார் உள்ளிட்ட 6 தொகுதிகளின் பாரதிய ஜனதா கட்சி மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று (ஏப்ரல் 10) வேலூரில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று வாக்கு சேகரிக்க வருகை தந்தார். அவரை பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அனைவரும் வரவேற்றனர். பின்னர் பிரதமர் நரேந்திர மோடிக்கு வேட்பாளர்கள் சார்பில் வெள்ளி செங்கோல் பரிசாக வழங்கப்பட்டது. பின்னர் பொன்னாடை போர்த்தி, பிரதமர் மோடியை வேட்பாளர்கள் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி பேசும்போது; ‘‘எனது அருமை சகோதர, சகோதரிகளே வணக்கம்’’ என தமிழில் பேசி தனது உரையை துவக்கினார்.

வரவுள்ள தமிழ் புத்தாண்டு தினத்திற்கான வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் வளம் தரும் ஆண்டாக அமையட்டும். தமிழ் மக்களின் ஆசிர்வாதம் என்றும் எப்போதும் எனக்கு உண்டு; தமிழ் மக்களுக்காக தமிழகத்தின் வளர்ச்சிக்காக என்னை அர்ப்பணிக்கிறேன்.

2014ம் ஆண்டுக்கு முன்னர் வளர்ச்சியே இல்லை; எந்த பத்திரிகையை புரட்டினாலும் ஊழல், முறைகேடு குறித்த செய்திகளே இருந்தன. 21ம் நூற்றாண்டில் அனைவரும் இணைந்து பாரதத்தை வளர்ச்சி அடைந்த நாடாக்குவோம்.

இன்றைய உலகத்தில் பலமிக்க நாடாக இந்தியா உள்ளது; அதில் தமிழகத்தின் பங்களிப்பு பெரிதாக உள்ளது. தமிழக இளைஞர்கள் இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறார்கள். இந்தியா வல்லரசாக மாறுவதில் தமிழகத்தின் பங்கு முக்கிய அங்கமாக உள்ளது.

வலிமையான இந்தியாவுக்கான அடித்தளத்தை கடந்த 10 ஆண்டுகால பா.ஜ.க., ஆட்சி அமைத்துள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு திமுக தடையாக உள்ளது. திமுக ஒரு குடும்பக் கம்பெனியாக செயல்பட்டு வருகிறது;

அவர்களின் குடும்ப அரசியலால் தமிழகத்தின் வளர்ச்சி பெரிதும் பாதிக்கப்படுகிறது. மத்திய அரசு அனுப்பும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாயை திமுக அரசு, ஊழல் செய்து வருகிறது. தமிழக இளைஞர்கள் முன்னேற முடியாமல் உள்ளனர். திமுக.,வினர் அனைத்திலும் அரசியல் செய்கின்றனர்.

ஊழலின் ஒட்டுமொத்த அத்தாரிட்டியாக திமுக.,வும், அதனை வழிநடத்தும் திமுக குடும்பமும் உள்ளது. ஜாதி, மதம், மொழி ரீதியில் தமிழக மக்களிடம் திமுக பிரிவினையை ஏற்படுத்தி வருகிறது. தமிழக மக்கள் ஒற்றுமையாக இருந்தால், திமுக செல்லாக்காசாகிவிடும் என்பதால் திமுக மக்களை பிளவுபடுத்துகிறது. திமுக.,வின் பிரித்தாளும் அரசியலை அம்பலப்படுத்தாமல் ஓயமாட்டேன்.

உலகம் முழுவதும் தமிழின் பெருமை தெரிய வேண்டும் என்பதற்காக தமிழ் மொழியை கற்று வருகிறேன். திமுக காங்கிரஸ் ஆட்சியில் தான் கட்சத்தீவை தாரை வார்த்து விட்டார்கள். இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை மீட்டு வந்திருக்கிறோம். தமிழகம் பெண் சக்தியை ஆதரிக்கும் பூமி; ஆனால் இ.ண்.டி. கூட்டணியினர் பெண்களை அவமதிக்கின்றனர்.

பெண்களை இழிவுப்படுத்துவதில் திமுக.,வும், காங்கிரசும் முன்னணியில் இருக்கின்றனர். ஏப்.,19ல் பா.ஜ.க. கூட்டணிக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ஓட்டும் தமிழகத்தின் வளர்ச்சிக்கானது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top