ஊழல், வாரிசு அரசியல், போதைப்பொருள் உள்ளிட்டவற்றை நாட்டை விட்டு வெளியேற்றும் தேர்தல் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மேட்டுப்பாளையத்தில் இன்று (ஏப்ரல் 10) நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் தமிழக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி வாக்கு சேகரித்தார்.
இக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
கோயம்புத்தூரின் ஆற்றலும், நீலகிரியின் அழகும் மேட்டுப்பாளையத்திற்கு உண்டு , நீலகிரி தேயிலைக்கு பெயர் போன இடம், இதற்கும் டீ விற்பவருக்கும் எப்படி தொடர்பு இல்லை என்று கூற முடியும்.
பல ஆண்டுகளாக வறுமையை ஒழிப்போம் என்ற முழக்கத்தை கொடுத்த காங்கிரஸ் கட்சியால் வறுமையை ஒழிக்க முடியவில்லை. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டது.
பல தசாப்தங்களாக, காங்கிரஸ் -திமுக இ.ண்.டி. கூட்டணி, எஸ்.சி-., எஸ்.டி., ஓபிசி சமூகத்தைச் சேர்ந்த கோடிக்கணக்கான மக்களை வீடு, குடிநீர், மின்சாரத்திற்காக ஏங்க வைத்தது. அவர்கள் ஆட்சியில் அனைவருக்கும் வீடு மற்றும் மின்சாரம் கிடைக்காது.
ஆனால் பாஜக அரசு கோடிக்கணக்கான மக்களுக்கு பிரதமர் ஆவாஸ் யோஜனாவை வழங்கியது.ஒவ்வொரு கிராமத்திற்கும் மின்சாரம் கொண்டு வந்தது. 80 கோடி ஏழைகளுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கியது. அவர்களில் பெரும்பாலோர் எஸ்.சி., -எஸ்.டி., ஓபிசி சமூகங்களைச் சேர்ந்தவர்கள்.
தமிழகம் முழுவதும் பாஜக அலை வீசுகிறது. திமுகவை தோற்கடிக்கும் ஆற்றல் பாஜகவுக்கு மட்டுமே உள்ளது. திமுக எப்போதும் வெறுப்பு அரசியலை கடைபிடிக்கிறது.
அயோத்தி ராமர் கோவில் விழாவை இ.ண்.டி. கூட்டணி எதிர்க்கிறது. தமிழகத்தில் ராமாயணம் தொடர்புடைய ஏராளமான கோவில்கள் உள்ளன. ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவுக்கு முன் அந்த கோவில்களுக்கு நான் சென்றேன். ஆனால் திமுகவினருக்கு அது பிடிக்கவில்லை. அவர்கள் சனாதன தர்மத்திற்கு எதிராக பேசி வருகின்றனர்.
ஊழலை அகற்றுவோம். ஊழல்வாதிகளை தண்டிப்போம். இது எங்களின் நிலைப்பாடு. ஆனால் இ.ண்.டி. கூட்டணி தலைவர்கள் என்ன கூறுகிறார்கள். அவர்கள் ஊழலை ஆதரிக்கிறார்கள். ஊழல்வாதிகளை காப்பாற்ற ஒன்றுகூடியுள்ளனர். கச்சத்தீவு தீவை காங்கிரசும் திமுகவும் தாரை வார்த்தது. அது தொடர்பான ஆவணங்களை நாங்கள் வெளியிட்டோம். அவர்களுக்கு தேர்தல் மூலம் நீங்கள் பாடம் புகட்ட வேண்டும்.
இந்தக் குடும்பக் கட்சிகள் தங்கள் மகன்கள் மற்றும் மகள்களைத் தவிர, எந்த ஏழையும், பழங்குடியினரும் உயர் பதவியில் இருக்க கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால், பழங்குடியினப் பெண்ணை முதன்முறையாக பாஜக ஜனாதிபதியாக ஆக்கியது. அதற்கு இ.ண்.டி. கூட்டணி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தியாவின் பலத்தை இ.ண்.டி. கூட்டணி நம்பவில்லை. கொரோனா தொற்றின் போது இந்தியாவால் தடுப்பூசி தயாரிக்க முடியாது என்று அவர்கள் தெரிவித்தனர். மேட் இன் இந்தியா மூலம் தடுப்பூசியை உருவாக்குவோம் என்று கூறினோம். இந்தியா தயாரித்தது மட்டுமின்றி, இலவச தடுப்பூசிகளை உலகின் பல்வேறு நாடுகளுக்கு அளித்து கோடிக்கணக்கான மக்களின் உயிரையும் காப்பாற்றியது.
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தது என்பதன் அடிப்படையில் மாநிலங்கள் பாகுபாடு காட்டப்பட்டன. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, ‘சப்கா சத்’ திட்டத்தில் செயல்படுகிறது. அதனால்தான் கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக லட்சக்கணக்கான கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளோம். தமிழகத்தில் மனித ஆற்றலும் திறமையும் கொட்டிக்கிடக்கிறது. ஒவ்வொரு மாநிலமும் வளர்ந்தால் நாடு வளர்ச்சி அடையும்.
திமுக ஆணவத்தில் உள்ளது. அண்ணாமலை யார் என்று கேள்வி கேட்கும் அளவுக்கு திமுக தலைவர்கள் ஆணவத்தில் உள்ளனர். ஒரு இளைஞர், அதுவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்துள்ளார். காவல்துறை உயரதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார். நேர்மையாக அரசியல் செய்து வருகிறார். களத்தில் வீரத்தை வெளிப்படுத்தி வரும் அவரை உங்களுக்கு தெரியவில்லையா?
இது ஊழலை இந்தியாவை விட்டு வெளியேற்றும் தேர்தல் என்றும், வாரிசு அரசியலை வெளியேற்றும் தேர்தல் என்றும், போதை பொருள்களை வெளியேற்றும் தேர்தல் ஆகும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.