அம்மாவின் வெற்றிக்காக பிரச்சாரத்தில் மகள்கள்!

தருமபுரி பாமக வேட்பாளராக சௌமியா அன்புமணி களமிறக்கப்பட்டுள்ள நிலையில், அத்தொகுதியில் பிரச்சாரமும் நாளுக்கு நாள் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸின், மனைவி சௌமியா, சமூக அக்கறை நிறைந்தவர்.. இவர் பசுமை தாயகத்தின் தலைவராக உள்ளார். ஏராளமான விழிப்புணர்வுகளை கல்லூரி மாணவிகள், பெண்கள் மத்தியில் ஏற்படுத்தி வருபவர். பெண் பிள்ளைகளுக்கான உத்வேகம் தரக்கூடிய வகையிலான பேச்சுக்களை அவர்களுக்கு வழங்கி வருபவர்.. இவரது தன்னம்பிக்கை பேச்சுக்களுக்கு ஏராளமான பெண் ரசிகைகள் உள்ளனர்.

இவ்வளவு காலமாக, தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்த சௌமியா அன்புமணி இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியில் தருமபுரி மக்களவைத் தேர்தலில் பாமக சார்பில் களம் காண்கிறார். சௌமியாவின் மொத்த குடும்பமும் அரசியல் பின்புலம் கொண்டவை. சிறு வயதிலிருந்தே அரசியல் சூழலுக்குள் வளர்ந்தவர் என்பதாலும், புகுந்த வீடும் அரசியல் தலைவர்களின் வீடு என்பதாலும், சௌமியாவின் அரசியல் வருகை நிறைய எதிர்பார்ப்பார்புகளை தொகுதி மக்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது.

சௌமியா அன்புமணி, அனைவரிடமும் கலகலப்பாக பழகக்கூடியவர்.. அனைத்து தரப்பு மக்களிடம் இறங்கி சென்று பேசக்கூடியவர்.. எளிதாக பழகக்கூடியவர்.. அதனால், தருமபுரி தொகுதியில் சௌமியா  வேட்பாளராக களமிறக்கப்பட்டதால் பாமகவுக்கு பலம் கூடியுள்ளது. பிரச்சாரத்திற்கு செல்லும் இடங்களில் பெண்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைக்கிறது. அதற்கேற்றபடி தீவிரமான பிரச்சாரத்தை சௌமியா துவங்கியுள்ளார்.

இந்த நிலையில், தற்போது பிரச்சாரத்தில், சௌமியாவின் மகள்களும் வாக்கு சேகரிக்க களத்தில் இறங்கி உள்ளனர். மகள்கள் சம்யுக்தா, சங்கமித்ரா, சஞ்சுத்ரா ஆகியோர் தங்களுடைய அம்மாவுக்காக கிராமங்களில் ஆதரவு திரட்டிக் கொண்டிருக்கிறார்கள்..

முதல் மகளான சம்யுக்தா, தன்னுடைய குழந்தைகள் அகிரா, மிளிர் ஆகியோருடன் வந்து சில நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்.. 2-வது மகளான சங்கமித்ரா, தன்னுடைய கணவருடன் தொகுதியிலேயே வந்து தங்கியிருந்து பிரச்சாரம் செய்கிறார். 3-வது மகள் சஞ்சுத்ராவும் தொகுதியிலேயே தங்கியிருந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தருமபுரியில் ஒவ்வொரு பகுதிகளுக்கும் இப்பெண்கள் மேற்கொள்ளும் பிரச்சாரம் தொகுதி மக்களை மலைக்க வைத்து வருகிறது.. வீடு வீடாக சென்று நோட்டீஸ் தந்து, காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை நிறைவேற்றி, தருமபுரியின் தண்ணீர் தேவையை என்னுடைய அம்மா தீர்த்து வைப்பார் என்று சொல்லி மாம்பழம் சின்னத்துக்கு வாக்கு சேகரிக்கிறார்கள். டாஸ்மாக் ஒழிப்பு குறித்தும் வாக்குறுதியை தந்து, ஓட்டு கேட்டு வருகிறார்கள்.

இந்த தொகுதிக்கு நல்லது செய்ய வேண்டும் என்று என் அம்மா நினைக்கிறாங்க.. அவர் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், தொகுதியிலுள்ள பிரச்சனையை சரி செய்வார்.. தொகுதி பிரச்சனைகள் அனைத்தையும், அக்கா, தங்கை என நாங்கள் 3 பேருமே என் அம்மாவிடம் கொண்டுபோய் சேர்ப்போம். இது எங்கள் ஊர்.. நீங்கள் எங்களுடைய மக்கள், நாம்தான் நம்மை முன்னேற்றிக்கொள்ள வேண்டும் என்று சவுமியா மகள்கள் பேசுவதை மலைத்து போய் பார்க்கிறார்கள் தருமபுரி மக்கள்.

ஓட்டு கேட்க போகுமிடமெல்லாம், ‘‘பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியின் மகள் வந்துருக்கேன்’’ என்று தங்களை  அறிமுகப்படுத்திக்கொண்டு பேசுகிறார்கள். கடைகள், வீடுகள் என எல்லா இடங்களிலும் ஓடி,ஓடி சென்று வாக்கு கேட்கிறார்கள்.

மார்க்கெட்டில் பூ விற்றுக்கொண்டிருந்த பெண்ணிடம் வாக்கு சேகரிக்க சென்றபோது, அந்த பெண், அன்புமணியின் மகளுக்கு தலையில் மல்லிகைப்பூ வைத்து மகிழ்ந்தார். மேலும் சிறிய பெட்டி கடைகளில் கிடைக்கின்ற உணவுகளை வாங்கி சாப்பிட்டு பிரச்சாரத்தை இரவு வரை தொடர்கின்றனர்.

இந்த முறை தருமபுரியில் சௌமியா அன்புமணி லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்பது தொகுதி மக்களின் ஒருமித்த கருத்தாக உள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top