டெல்லி சமூக நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் நேற்று (ஏப்ரல் 10) தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததுடன், ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
புதிய மதுபான கொள்கை முறைகேடு ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் ஆம் ஆத்மி கட்சியில் உள்ளவர்கள் ஆட்டம் கண்டு வருகின்றனர். இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
கைதை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதனை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
இந்த நிலையில், டெல்லி சமூக நலத்துறை அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென அறிவித்துள்ளார். இது சிறையில் உள்ள முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக ராஜ்குமார் ஆனந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ஊழலை எதிர்த்துப் போராடுவதற்காக பிறந்த கட்சி, ஆனால் இன்று கட்சியே ஊழலில் சிக்கித் தவிக்கிறது. என்னால் இந்த அரசாங்கத்தில் பணியாற்ற முடியாது, இந்த ஊழலுடன் எனது பெயர் இணைக்கப்படுவதை நான் விரும்பவில்லை.
’அரசியல் மாறினால் நாடு மாறும்’ என்று அரவிந்த் கெஜ்ரிவால் ஒருமுறை ஜந்தர் மந்தர் ராம்லீலா மைதானத்தில் கூறினார். இன்று அரசியல் மாறவில்லை, ஆனால் அரசியல்வாதியாக அவர் மாறிவிட்டார்” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், “பாபாசாகேப் அம்பேத்கரால் நான் அரசியலுக்கு வந்து அமைச்சரானேன். எனது பங்களிப்பை சமுதாயத்திற்கு திருப்பிச் செலுத்த விரும்பினேன். ஆம் ஆத்மி கட்சியில், தலித் எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்கள், அமைச்சர்களை மதிப்பதில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில் கட்சியில் உள்ள எல்லா தலித்துகளும் ஏமாந்து போயுள்ளனர்.
இந்த நிலையில் கட்சியில் நீடிப்பது கடினம். எனவே நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன். அதேவேளையில் வேறு எந்த கட்சிக்கும் நான் செல்லமாட்டேன்” என்று ராஜ் குமார் ஆனந்த் தெரிவித்துள்ளார்.