“சமரச அரசியலுக்காகவும், வாக்கு வங்கிக்காகவும் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் முதலான கட்சிகள் தேர்தலில் போட்டியிடுகின்றன” என பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம், வடக்கு மால்டாவில் நேற்று (ஏப்ரல் 26) நடந்த பிரச்சார பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: “ஒரு காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு மேற்கு வங்க மாநிலம் மிகப் பெரிய உந்து சக்தியாக இருந்தது. அதோடு சமூக சீர்திருத்தம், அறிவியல் முன்னேற்றம், ஆன்மிக முன்னேற்றம், நாட்டுக்காக தியாகம் ஆகியவற்றில் முன்னணியில் இருந்தது. ஆனால், இடதுசாரி மற்றும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில், மாநிலத்தின் மரியாதை மற்றும் கண்ணியம் குறைக்கப்பட்டன.
திரிணமூல் காங்கிரஸ் ஆட்சியில் ஆயிரக்கணக்கான அளவுக்கு ஊழல் மட்டுமே நடக்கிறது. விவசாயிகளையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. இளைஞர்களின் எதிர்காலத்தில் திரிணமூல் காங்கிரஸ் விளையாடி வருகிறது. 26 ஆயிரம் குடும்பங்கள் வேலை இழந்துள்ளன. கடன் சுமையுடன், வேலையை தக்க வைத்துக் கொள்வதற்காக திரிணமூல் காங்கிரஸுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டி உள்ளது.
காங்கிரஸும், திரிணமூல் காங்கிரஸும் இ.ண்.டி. கூட்டணியில் இடம்பெற்றிருந்தும் தேர்தலில் தனித்தனியாக போட்டியிடுகின்றன. காங்கிரஸ் உங்கள் சொத்துகளை அபகரிக்க விரும்புகிறது, அதற்கு எதிராக ஒரு வார்த்தை கூட திரிணமூல் காங்கிரஸ் பேசவில்லை. மவுனமாக இருக்கிறது.
உங்கள் நிலங்களை பறித்து, அதில் வங்கதேசத்தில் இருந்து வந்தவர்களை திரிணமூல் குடியமர்த்தி உள்ளது. ஆனால், உண்மையில் இரு கட்சிகளின் கொள்கையும் ஒன்றுதான். சமரச அரசியலுக்காகவும், வாக்கு வங்கி அரசியலுக்காகவும் இரு கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.