நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. முதற்கட்ட தேர்தல் கடந்த 19ம் தேதியும், இரண்டாம் கட்ட தேர்தல் கடந்த 26ம் தேதியும் நடைபெற்றது. இதையடுத்து, வரும் 7, 13, 20, 25 ஆகிய தேதிகளில் அடுத்தடுத்த கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஜூன் 1ம் தேதி கடைசி கட்டமான 7ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இதனிடையே, வரும் 20ம் தேதி 5ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இந்த 5ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 26ம் தேதி தொடங்கியது. இதையடுத்து, வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலம் லக்னோ மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக களம் காணும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (ஏப்ரல் 29) வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி உடன் இருந்தனர்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, ராஜ்நாத் சிங் மற்றும் பிற மூத்த தலைவர்கள் அங்குள்ள பா.ஜ.க. தலைமையகத்தில் இருந்து தொண்டர்களுடன் ஊர்வலமாக ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து வேட்புமனு தாக்கல் செய்தனர்.