மக்களவைத் தேர்தலுக்கு பின் காங்கிரஸ் காணாமல் போகும்; தனது கட்சியைத் தேடி கண்டுபிடிக்க யாத்திரை செல்வார் ராகுல் காந்தி என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விமர்சித்தார்.
உத்தர பிரதேச மாநிலம், பரேலியில் நேற்று (மே 02) நடைபெற்ற பாஜக பிரசாரக் கூட்டத்தில் அவர் பங்கேற்றுப் பேசியதாவது:
இ.ண்.டி. கூட்டணியின் இளவரசர் (ராகுல்), இந்திய ஒற்றுமை யாத்திரையுடன் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியிருந்தார். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையப் போவது உறுதி. எனவே, ஜூன் 4ம் தேதிக்கு பிறகு (வாக்கு எண்ணும் நாள்) காங்கிரஸை தேடிக் கண்டுபிடிக்கும் யாத்திரையை அவர் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
நாட்டில் பயங்கரவாதம், நக்ஸல் தீவிரவாதத்துக்கு முடிவுகட்டவும், இந்தியாவை மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாற்றவும் இத்தேர்தல் முக்கியமானது. இ.ண்.டி. கூட்டணி கட்சியான சமாஜிவாதி, குடும்ப அரசியலில் ஈடுபட்டு வருகிறது. கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவின் குடும்பத்தில் 5 பேருக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு கடந்த 70 ஆண்டுகளாக தடை ஏற்படுத்தியது காங்கிரஸ். ஆனால், அப்பணியை நிறைவேற்றியது பாஜக. அயோத்தி கோவிலில் மூலவர் பிராணப் பிரதிஷ்டை விழாவுக்கு அகிலேஷ், ராகுல், பிரியங்கா உள்ளிட்டோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. ஆனால், தங்களின் வாக்கு வங்கிக்கு பயந்து, விழாவில் அவர்கள் பங்கேற்கவில்லை.
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில், பயங்கரவாதத் தாக்குதலுக்கு உரிய பதிலடி தரப்படவில்லை. யார் வேண்டுமானாலும் இந்தியாவுக்குள் நுழைந்து குண்டு வெடிப்பை நிகழ்த்தலாம் என்ற நிலை காணப்பட்டது. வாக்கு வங்கி அரசியலே இதற்கு காரணம்.
ஆனால், பாஜக ஆட்சியில் புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகள் மீது துல்லியத் தாக்குதல் நடத்தப்பட்டது.
உத்தர பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தபின், வகுப்புவாத கலவரங்களுக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது; மக்களின் இடப்பெயர்வு தடுக்கப்பட்டுள்ளது. அதே நேரம், குண்டர்கள் வேறு மாநிலத்துக்கு தப்பியோடுகின்றனர்.
இ.ண்.டி. கூட்டணி உள்பூசல்களால் சிதைந்து போயுள்ளது. சுய நலனுக்காக பாடுபடும் அக்கட்சிகளால் ஏழைகளுக்கு எந்த பயனும் விளையாது. இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.