உத்தரபிரதேச மாநிலத்திற்கு நேற்று (மே 05) சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தி ராமர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். வேதமந்திரங்கள் முழங்க அங்கு நடந்த சிறப்பு பூஜைகளில் பங்கேற்று இறைவழிபாடு நடத்தினார். இதுதொடர்பான வீடியோவை பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோருடன் சேர்ந்து, ரோட் ஷோவில் ஈடுபட்டார்.
சம்பல், ஹத்ராஸ், ஆக்ரா, ஃபதேபூர் சிக்ரி, ஃபிரோசாபாத், மெயின்புரி, எட்டா, படான், பரேலி, அயோன்லா உள்ளிட்ட பத்து மக்களவை தொகுதிகளுக்கு, நாளை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னதாக பிரதமர் மோடியின் ஞாயிற்றுக்கிழமை பயணம் அமைந்தது. ராமர் கோவில் வருகைக்கு முன்னதாக எட்டாவாவில் நடைபெற்ற ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அதன் பிறகு துராஹாராவுக்குச் சென்றார், அங்கு அவர் மற்றொரு தேர்தல் பேரணியில் உரையாற்றினார்.
ராமர் கோவில் பிரார்த்தனையை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி ரோட்ஷோ நடத்தினார். சுக்ரீவா கோட்டையில் தொடங்கி ராமர் பாதையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்று லதா சவுக்கில் ரோட் ஷோ நிறைவடைந்தது. ரோட்ஷோவுக்கான பாதை 40 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. இதில் சிந்திகள், பஞ்சாபியர்கள், விவசாயிகள் மற்றும் பாரம்பரிய உடையில் பெண்கள் உட்பட பல்வேறு சமூகத்தினர் பங்கேற்றனர். கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் மலர் கண்காட்சிகளும் அமைக்கப்பட்டு இருந்தன. சாலையின் இரண்டு புறமும் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள், மலர்களை தூவி, மோதி மோதி என முழக்கங்களை எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.