தேர்தல் ஆணையத்தின் பணி சிறப்பு: பிரதமர் மோடி பாராட்டு!

மூன்றாம் கட்ட தேர்தல் 12 மாநிலங்களில் உள்ள 94 தொகுதிகளில் இன்று (மே 07) வாக்குப்பதிவு நடந்து வருகிறது. தனது சொந்த மாநிலமான குஜராத்தின் ஆமதாபாத்தில் காந்தி நகர் தொகுதிக்குட்பட்ட ரானிப் பகுதி அருகே நிஷான் மேல்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார்.

முன்னதாக பிரதமர் மோடியை குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் வரவேற்றனர். குழந்தைகள் வரைந்த ஓவியங்களை பிரதமர் மோடியிடம் காட்டிய போது, அதில் கையெழுத்திட்டார். தொடர்ந்து மக்கள் பலரும் பிரதமருடன் கைகுலுக்கினர். பல குழந்தைகளை கையில் வாங்கி கொஞ்சினார் பிரதமர்.

பிரதமர் மோடியை காண குழந்தைகள் உட்பட மக்கள் கூட்டம் குவிந்தது. காண குவிந்த மக்கள், பிரதமர் மோடி உடன் மொபைல் போனில் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். தனது ஜனநாயக கடமையை ஆற்றிய பின், வாக்குச்சாவடி அருகே, மக்கள் மத்தியில் வாக்களித்து விட்டேன் என கையில் இருந்த மையை பிரதமர் மோடி காட்டினார்.

வாக்குச்சாவடிக்கு வெளியே, செய்தியாளர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறியதாவது: இன்று மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு. தேர்தலின் போது வன்முறை சம்பவங்கள் பதிவாகவில்லை. வன்முறை இல்லாத தேர்தல் இது. சிறப்பாக பணியாற்றிய தேர்தல் ஆணையத்துக்கு எனது பாராட்டுகள். ஜனநாயகத்தை மக்கள் பண்டிகை போல் கொண்டாட வேண்டும். ஜனநாயகத் திருவிழாவின் தேர்தலில் மக்கள் மிக எளிதாக, எவ்வித சிரமமுமின்றி வாக்களித்தனர். வெப்பம் அதிகமாக இருப்பதால் மக்கள் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். மக்கள் அனைவரும் திரண்டு வந்து வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top