“இந்தத் தேர்தலில் வெற்றி பெறப்போவது ஓட்டு ஜிகாத்தா அல்லது ராம ராஜ்ஜியமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மத்தியப் பிரதேச மாநிலம் கார்கோனில் பிரதமர் மோடி இன்று (மே 07) தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர் “இண்டி கூட்டணிக் கட்சிகள் தத்தம் வாரிசுகளைக் காப்பாற்றவே தேர்தலில் போட்டியிடுகின்றன. அவர்களுக்கு மக்கள் நலன் பற்றி அக்கறை இல்லை. மக்களின் சுக, துக்கங்கள் பற்றிக் கவலை இல்லை. இந்தத் தேர்தலில் வெற்றி பெறப்போவது ஓட்டு ஜிகாத்தா அல்லது ராம ராஜ்ஜியமா என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்” என்று பேசினார்.
தங்கள் வாரிசுகளைப் பாதுகாத்து கட்சியை அவர்கள் வசம் ஒப்படைப்பதற்காகவே தேர்தலை எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்கு உங்களுடைய மகிழ்ச்சி பற்றி எந்த அக்கறையும் இல்லை. நான் உங்களது ஆசிகளை எதிர்நோக்கி வந்துள்ளேன். நர்மதா நதிக் கரையில் வாழும் மக்கள் என்னை ஏமாற்ற மாட்டார்கள். அவர்கள் எனக்கு நன்மை செய்வார்கள் என்று நான் நம்புகிறேன். உங்களின் வாக்குகள் 25 கோடி மக்களை வறுமையில் இருந்து காப்பாற்றியுள்ளது.
உங்களின் ஒரு வாக்கு இந்த தேசத்தை உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உருவாக்கியுள்ளது. உங்களின் ஒரு வாக்கு சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்துள்ளது. ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்பியுள்ளது. பழங்குடியினப் பெண்ணை குடியரசுத் தலைவராக்கியுள்ளது. மகளிர் இடஒதுக்கீட்டை உறுதி செய்துள்ளது.
இப்போது வாக்கு ஜிகாத் அல்லது ராம ராஜ்ஜியம் எது அமைய வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். ஏனெனில் இந்தியா வரலாற்றில் திருப்புமுனையை சந்திக்கும் காலகட்டத்தில் இருக்கிறது” என்றார்,