தென்னிந்தியர்கள், ஆப்பிரிக்கர்களைப் போல் உள்ளதாகவும், வடமாநிலங்களில் உள்ளவர்கள் சீனர்கள் போல் உள்ளதாகவும் கூறிய காங்கிரஸ் வெளிநாட்டுப் பிரிவு தலைவர் சாம் பிட்ரோடாவின் பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்மையில், அமெரிக்காவில் உள்ளதை போன்று இந்தியாவில் வாரிசுரிமை சட்டம் கொண்டுவரப்படும் என சாம் பிட்ரோடா பேசியது விவாதப்பொருளாக மாறி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், அமெரிக்க ஊடகம் ஒன்றுக்கு சாம் பிட்ரோடா பேட்டியளித்துள்ளார்.
அதில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்களைப் போலவும், மேற்கில் உள்ளவர்கள் அரேபியர்களைப் போலவும், வடக்கில் உள்ளவர்கள் வெள்ளையர்களைப் போலவும், தெற்கில் உள்ளவர்கள் ஆப்பிரிக்கர்களை போல உள்ளதாக தெரிவித்துள்ளார்.
சாம் பிட்ரோடாவின் இந்த நிறவெறி பேச்சுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: தோல் நிறத்தை வைத்து இந்தியர்களை மதிப்பிடுவது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது; ராகுல் காந்தியின் அரசியல் ஆலோசகர் பிட்ரோடாவின் பேச்சு எனக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.