பாஜகவின் மோசமான செயல்திறன் காரணமாகவே பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்தித்து வருவதாக செய்திகளை எதிர்க்கட்சிகள் பரப்பிய நிலையில், அது வதந்தி என தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இப்போதே பங்குகளை வாங்குவது நல்லது. வரும் ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு பங்குச் சந்தைகள் ஏற்றத்தை சந்திக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
பங்குச் சந்தை வீழ்ச்சி குறித்த கேள்விக்கு அமித்ஷா அளித்த பதில்:
பங்குச் சந்தையை தேர்தலுடன் இணைக்க கூடாது. ஆனால், நிலையான அரசு அமையும் பட்சத்தில் அது பங்குச் சந்தை சிறப்பாக செயல்பட வழிவகுக்கும்.
பங்குச் சந்தை கடந்த சில அமர்வுகளில் பல்வேறு காரணிகளால் 16 முறை பெரும் திருத்தங்களை கண்டுள்ளன. 7 கட்ட தேர்தல் முடிந்து ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட உள்ளன. இதில் பாஜக கூட்டணி 400-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிலையான ஆட்சி அமையும். அதன் பிறகு இந்திய பங்குச் சந்தைகள் கணிசமான ஏற்றத்தை சந்திக்கும். எனவே, பங்குகளை வாங்க இதுவே சரியான தருணம். இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.