‘கடவுள் ஸ்ரீபாலராமரை மீண்டும் கூடாரத்துக்கு கொண்டுசெல்ல காங்கிரஸ் சதித் திட்டம் தீட்டி வருகிறது’ என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்படும் முன்பு ஒரு கூடாரத்தில் ஸ்ரீபாலராமரின் பழைய சிலை வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. இதைக் குறிப்பிட்டு, பிரதமர் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்தார்.
மக்களவைத் தேர்தலையொட்டி, ஜார்க்கண்ட் மாநிலம், கிரிதியில் நேற்று (மே 14) நடைபெற்ற பாஜக பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:
அயோத்தி ராமர் கோவில் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் பேசுகின்றனர்; இது வெட்ககேடானது. கடவுள் ஸ்ரீபாலராமரை மீண்டும் கூடாரத்துக்கு கொண்டுசெல்ல சதித் திட்டம் தீட்டி வருகின்றனர். கோவில் வளாகத்துக்கு பூட்டு போட விரும்புகின்றனர். இத்தகைய விருப்பம் கொண்டவர்களை மக்கள் தூக்கியெறிய வேண்டும்.
ஊழல் -ஒருசார்பு அரசியல் -குடும்ப அரசியலுக்கு அடையாளமாக ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் உள்ளன. இந்த தீமைகளில் இருந்து தேசத்தை விடுவிக்க உறுதிபூண்டுள்ளேன்.
நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்தை வளரவிட்டதன் மூலம் பல குடும்பங்கள் அழிய காரணமாக இருந்தது காங்கிரஸ். அதேநேரம், நாட்டில் நக்ஸல் தீவிரவாதத்தை பாஜக அரசு கட்டுப்படுத்தி வருகிறது. எனது மூன்றாவது ஆட்சிக் காலத்தில் நக்ஸல் தீவிரவாதமும் பயங்கரவாதமும் துடைத்தெறியப்படும்.
அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டது, நாட்டின் நலனுக்கான மிகப் பெரிய நடவடிக்கையாகும். எனக்கு கல்லறை தோண்ட ‘இண்டி’ கூட்டணி கட்சிகள் கனவுகாண்கின்றன. ஆனால், மக்களின் அன்பும் பாசமும் எனக்கு பாதுகாப்பு கவசமாக இருக்கிறது.
நான் அரச குடும்பத்தில் பிறக்கவில்லை; ஏழையாக பிறந்து, வறுமையில் வாழ்ந்தேன். எனவேதான், வறுமையில் இருந்து நாட்டு மக்களை விடுவிக்க உறுதியேற்றேன். ஏழை மக்கள் இலவசமாக சிகிச்சை பெற ‘ஆயுஷ்மான் பாரத்’ மருத்துவ காப்பீடு திட்டத்தை தொடங்க இதுவே காரணம்.
நாட்டில் 80 கோடி மக்களுக்கு இலவசமாக உணவு தானியங்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கும் தொடரும்.
காங்கிரஸும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியும் கழுத்தளவு ஊழலில் மூழ்கியுள்ளன. ஊழலில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்ப அனுமதிக்கமாட்டேன். மத்தியில் வலுவான அரசு அமைந்தால்தான், நாட்டு மக்களின் நலனை காக்க முடியும். வலுவற்ற அரசு அமைந்தால், தேசமும் வலுவிழக்கும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.