மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) அமல்படுத்தப்படுவதை முதல்வர் மம்தா பானர்ஜியால் தடுக்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
மேற்கு வங்க அரசு சிஏஏவை அனுமதிக்காது என்று மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசி வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இவ்வாறு பேசியிருப்பது கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
மேற்கு வங்கத்தில் மதுவா சமூகத்தினர் அதிகமுள்ள பாங்கான் பகுதியில் நேற்று (மே 14) தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது:
மத்திய அரசு கொண்டு வரும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மம்தாவால் தடுத்து நிறுத்த முடியாது. மாநில அரசுக்கு அப்படி எந்த அதிகாரமும் கிடையாது. அண்டை நாடுகளில் பெரும்பான்மையினராக உள்ளவர்களால் இன்னல்களைச் சந்தித்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்த நமது சகோதரர்களுக்கு குடியுரிமை வழங்குவதை யாரும் தடுக்க முடியாது. உலகில் யாருக்கும் இதனைத் தடுக்கும் சக்தி கிடையாது.
அண்டை நாடுகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு குடியுரிமை வழங்குவது என்பது பிரதமர் நரேந்திர மோடியின் வாக்குறுதி. ‘இந்தியர்’ என ஒருவருக்கு குடியுரிமையை வழங்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டான தனிஉரிமை என்பதை மம்தா நினைவில் கொள்ள வேண்டும். இதில் மாநில அரசுகளுக்கு எந்த அதிகாரமும் கிடையாது.
சிஏஏ குறித்து மேற்கு வங்கத்தில் மம்தா தேவையற்ற வதந்திகளையும், பொய்களையும் பேசி வருகிறார். முக்கியமாக சிஏஏ சட்டத்தின்கீழ் விண்ணப்பம் செய்வோருக்கு குடியுரிமை தொடர்பான பிரச்னை வரும் என்று அவர் கூறுகிறார். இங்குள்ள மதுவா மக்களுக்கு (வங்கதேசத்தில் இருந்து வந்த ஹிந்துகள்) நான் வாக்குறுதி அளிக்கிறேன். உங்களில் யாருக்கும் இந்தியக் குடியுரிமையில் எந்தப் பிரச்னையும் வராது. இந்த நாட்டுக் குடிமகனாக உரிய மரியாதையுடன் நீங்கள் வாழ முடியும்.
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.