போதைப்பொருள் விவகாரம்.. சுசித்ரா புகாரில் கமல்ஹாசனை விசாரிக்க வேண்டும் : நாராயணன் திருப்பதி!

விருந்துகளில் கொகைன் போதைப் பொருள் பயன்படுத்தப்படுவதாக பாடகி சுசித்ரா தெரிவித்த கருத்தின் அடிப்படையில் நடிகர் கமல்ஹாசனை விசாரிக்க வேண்டும் என பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தமது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: பாடகி சுசித்ரா என்பவர், நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன் நடத்தும் கேளிக்கை விருந்துகளில் வெள்ளித் தாம்பாளத்தில் போதைப் பொருள் (கொகைன்) அளிக்கப்படுகிறது என்று சர்வ சாதாரணமாக கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
மேலும் அவருடைய முன்னாள் கணவர் எடுத்து கொள்கிறார் என்றும் தமிழ் திரைப்பட உலகில் போதை பொருள் என்பது சகஜமாக உள்ளது என்றும் கூறியிருப்பது தமிழகம் மற்றும் திரை உலகம் திசை மாறி செல்கிறது என்பதை உணர்த்துகிறது.

ஒரு நேர்காணலில் பெண் போலீசார் குறித்து பேசியதற்கு பேட்டி அளித்தவரையும், பேட்டி எடுத்தவரையும் கைது செய்த தமிழக காவல்துறை, இந்த நேர்காணலில் சுசித்ரா போதை பொருள் குறித்து பேசிய விஷயங்களை அலட்சியப்படுத்தாமல் தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும். அவர் குறிப்பிட்டவைகள் தவறாக இருக்கும் பட்சத்தில் அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி அவர் கூறியதில் அடிப்படை ஆதாரமிருந்தால், கார்த்திக்குமார் மற்றும் கமல்ஹாசன் போன்றவர்களை விசாரித்து போதைப் பொருட்கள் எங்கிருந்து யார் மூலம் விநியோகிக்கப்படுகிறது என்பதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தின் மிகச்சிறந்த நடிகரும், அரசியல் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அவர்கள் இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாக பேச முன்வர வேண்டும். சுசித்ரா கூறியதில் உண்மையில்லையெனில், மறுப்பு தெரிவிப்பதோடு மட்டுமல்லாமல் அவர் மீது புகார் அளித்து வழக்கு தொடுக்க வேண்டும். இவ்வாறு நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top