யானை தந்தம் கடத்தல்: திமுக எம்.பி., கார் டிரைவர் உட்பட இருவர் கைது!

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே யானை தந்தங்களை கடத்திய திமுக நிர்வாகி மகன் உட்பட இரண்டு பேரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடத்தல் யானை தந்தங்கள் வாங்கி விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சேத்தூர் காவல் நிலைய போலீஸார் நேற்று (மே 16) நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, ஒருவர் சந்கேப்படும் விதமாக இருசக்கர வாகனத்தில் சுற்றி திரிந்துள்ளார். அவரைப் பிடித்து போலீஸார் சோதனை நடத்தியதில் தலா ஒரு அடி உயரமும், 3.5 கிலோ எடையுமுள்ள இரண்டு யானை தந்தங்களை அந்த நபர் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. விசாரணையில், பிடிபட்ட நபர் கணபதி சுந்தரநாச்சியார்புரத்தைச் சேர்ந்த திமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் அனந்தப்பனின் மகன் ராம் அழகு எனத் தெரியவந்தது. தொடர்ந்து ராம் அழகை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீஸார், இது குறித்து வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த வனத்துறையினர், போலீசார் வசமிருந்த ராம் அழகை கைது செய்ததுடன் பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்கள் எங்கிருந்து கடத்திவரப்பட்டது, வேறு ஏதேனும் தந்தங்கள் பதுக்கப்பட்டுள்ளதா? யாருக்கு சொந்தமானது, யார், யாருக்கு தொடர்பு இருக்கிறது என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர்.

வனத்துறையினரின் விசாரணையில் தென்காசி திமுக எம்.பி. தனுஷ்குமாரிரிடம் ஓட்டுநராகப் பணிபுரிந்த தேவதானத்தைச் சேர்ந்த செல்லையா என்பவரிடம் வாங்கியதாக ராம் அழகு கூறினார். இதையடுத்து தேவதானம் விரைந்து சென்ற வனத்துறையினர், அங்கு மறைந்திருந்த செல்லையாவைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பறிமுதல் செய்யப்பட்ட யானை தந்தங்கள் திருடிவரப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. எனவே இது குறித்து வழக்கு பதிவுசெய்த வனத்துறையினர், யானை தந்தங்கள் கடத்திவந்த ராம் அழகு மற்றும் செல்லையா ஆகியோரை கைது செய்தனர்.

யானை தந்தம் கடத்தல் விஷயத்தில் திமுக எம்.பி.க்கும் தொடர்பு இருக்கலாம் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். உண்மையை வனத்துறை விரைந்து கண்டறிந்து நாட்டு மக்களிடம் தெரியப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top