5-வது கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 20-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று (மே 18) மாலை பிரச்சாரம் ஓய்ந்தது.
543 மக்களவை தொகுதிகளை உள்ளடக்கிய பாராளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக நடந்து வரும் தேர்தலில் இதுவரை 4 கட்டத் தேர்தல் நிறைவு பெற்றுள்ளது. 5ம் கட்டத் தேர்தல் வருகின்ற மே 20 அன்று நடைபெறுகிறது.
இதுவரை 379 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 5ம் கட்ட தேர்தல், 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் வருகின்ற திங்கள் அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அதன்படி உத்தரப்பிரதேசம் 14, மகாராஷ்டிரா 13, மேற்குவங்கத்தில் 7, பீகாரில் 5, ஜார்க்கண்டில் 3, ஒடிசாவில் 5, காஷ்மீர் மற்றும் லடாக்கில் தலா ஒரு தொகுதிகள் என மொத்தம் 49 தொகுதிகளில் இன்று மாலையுடன் பிரசாரம் ஓய்ந்தது. 5ம் கட்ட தேர்தலை பொறுத்தவரையில் 635 வேட்பாளர்கள் மொத்தத்தில் களம் காணுகின்றனர். இதில் அமேதியில் பாஜக வேட்பாளராக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார். லக்னோவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மும்பை வடக்கில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உள்ளிட்டோர் நட்சத்திர வேட்பாளர்களாக உள்ளனர்.
5ம் கட்ட தேர்தலை முன்னிட்டு இன்று பிரதமர் நரேந்திர மோடி, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர்.