‘முதல்வர் ஸ்டாலின் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர் பிரதமர் நரேந்திர மோடி மீது பழி சொல் சுமத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது’ என தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள வீடியோ பதிவில்;
பிரதமர் நரேந்திர மோடி ஒடிசாவில் பிரசாரம் செய்த போது தமிழர்களை அவமதித்து விட்டதாக, முதல்வர் ஸ்டாலின் பொய் கூறியுள்ளார். ஸ்டாலின் சரியாக படிப்பதில்லை. இந்தியாவை ஆள ஒருவர் இந்தியாவில் பிறந்திருக்க வேண்டும்.
தமிழக முதல்வராக வரும் நபர் தமிழனாக இருக்க வேண்டும். இதேபோல ஒவ்வொரு மாநில மக்களும் விரும்புகின்றனர்.
ஒடிசா மாநிலத்தில், பிஜு ஜன தளத்தின் நவீன் பட்நாயக் 25 ஆண்டுகளாக முதல்வராக உள்ளார். அவருக்கு 12 ஆண்டுகளாக தனி செயலராக இருப்பவர் வி.கே.பாண்டியன். அவர் தமிழகத்தை சேர்ந்தவர்.
சமீபத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி பதவியை ராஜினாமா செய்து விட்டு பிஜு ஜனதா தளத்தில் இணைந்து, தேர்தல் பிரசார முகமாக பாண்டியன் உள்ளார். பாண்டியன் சொல்வதை தான் நவீன் பட்நாயக் கேட்கிறார்.
தனக்கு பிடித்தமான வேறு மாநில ஐ.ஏ.எஸ்., அதிகாரி, பதவியை ராஜினாமா செய்து விட்டு, தி.மு.க.,வில் சேர்ந்தால், அவரை தி.மு.க.,வின் முகம் என்று ஸ்டாலின் சொல்வாரா?
பிரதமர் மோடி பேசியிருப்பது, ‘புரி ஜெகன்னாத ஆலயத்தின் சாவி காணாமல் போய் விட்டது. அதை யாரோ திட்டமிட்டு மறைத்துள்ளனர்’ என்றார். தமிழகத்தில் மண்ணின் மைந்தர் என்று பேசும் போது ஒடிசாவில் தனி நியாயமா?
பிரதமர் மோடி, ‘ஒடிசா மக்களுக்கு முன்னுரிமை தராமல், வேறு மாநிலத்தில் இருந்து ஒருவர் உள்ளார்; நாங்கள் ஒடிசாவில் பிறந்த ஒருவரை ஒடிசா முதல்வராக்குவோம்’ என பேசியுள்ளார்.
ஸ்டாலின் பொய் சொல்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். பிரதமர் மீது அவர் பழி சுமத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார்.