மிகச்சிறந்த ஹிந்துத்வா தலைவர்: ஜெயலலிதாவை புகழ்ந்த தலைவர் அண்ணாமலை!

‘‘தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகச் சிறந்த ஹிந்துத்வா தலைவராக விளங்கினார். அவருடைய இடத்தை பாஜக நிரப்பி வருகிறது,’’ என தலைவர் அண்ணாமலை குறிப்பிட்டார்.
தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: அ.தி.மு.க., பொதுச்செயலராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மிகச் சிறந்த ஹிந்துத்வா தலைவர். ஹிந்து மதத்துக்கு அவர் நேரடியாக ஆதரவு தெரிவித்து வந்தார்.

ஜெயலலிதா இருந்தபோது தமிழகத்தில் பாஜக இருந்தாலும், ஹிந்து மதத்தினரின் ஆதரவு அவருக்கே பெரிதும் கிடைத்து வந்தது. ஹிந்து மதத்தின் வளர்ச்சிக்காக அவர் பல சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளார்.

அயோத்தி ராமர் கோவிலுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் மதமாற்ற தடுப்புச் சட்டத்தையும் அமல்படுத்தினார். தன் சம்பளத்தை கோவில்களுக்கு நன்கொடையாக அளித்தது, கோவில் நகரமான ஸ்ரீரங்கத்தில் போட்டியிட்டார்.

கோவில்கள் புனரமைப்பு பணிகள் மேற்கொண்டார். கோவில்களுக்கு யானைகள் நன்கொடையாக அளித்தார். இதையெல்லாம் வைத்து அவருடைய ஹிந்து மதப் பற்றை தெளிவாக புரிந்து கொள்ளலாம்.

அவருடைய மறைவுக்குப் பின் அ.தி.மு.க., அந்தக் கொள்கையை கைவிட்டு விட்டது. அதனால் தமிழகத்தில் உள்ள ஹிந்துத்வா கொள்கைக்கு ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை பா.ஜ.க., நிரப்பி வருகிறது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பா.ஜ.க.,வை ஆதரிக்கின்றனர்.
இந்த மக்களவைத் தேர்தலில் கட்சியின் வாக்கு சதவீதம், இரட்டை இலக்கமாக மாறும். தமிழகத்தில் பா.ஜ.க., இனி மற்ற கட்சிகளின் தயவில் இருக்க வேண்டிய அவசியமில்லை.

தமிழக சட்டசபைக்கு 2026ல் நடக்க உள்ள தேர்தலுக்கு, 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை இப்போதே அறிவிக்க கட்சித் தலைமையை வலியுறுத்த உள்ளேன். மக்கள் ஆதரவை திரட்ட மற்றொரு பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளேன்.

அடுத்தாண்டில் 75 வயதாவதால் பிரதமர் நரேந்திர மோடி ஓய்வு பெற்று விடுவார் என கூறுகின்றனர்; இது தேவையில்லாதது. இந்த மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின்போது உடல் தகுதி, கடின உழைப்பு, மக்களிடையே செல்வாக்கு என, எதை எடுத்துக் கொண்டாலும், தன்னை விட வயதில் இளையவர்களான காங்கிரசின் ராகுல், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோரை விட மூன்று மடங்கு அதிக திறன்களை பிரதமர் நரேந்திர மோடி கொண்டுள்ளார். உடல் திறன், மன திடம் என, எந்த வகையிலும் பிரதமர் மோடி வலுவானவராக உள்ளார்.

அதனால் அவர் நீண்ட காலத்துக்கு தொடர்வார். 75 வயதில் ஓய்வு என பா.ஜ.க.,வின் சட்டங்களில் இல்லை. பிரதமரின் வயது மற்றும் பணிகளோடு ஒப்பிட்டால் ராகுல் வெகு தொலைவில் உள்ளார்.

மோடிக்குப் பின் யார் என்பது பற்றி பேச வேண்டுமானால், 2029க்குப் பின் பார்ப்போம். அதுவரை இது குறித்து பேச வேண்டிய அவசியமில்லை. இந்த விஷயத்தில் என் மனதுக்கு உடனடியாக நினைவுக்கு வருபவர், கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி தான். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, ஐ.பி.எல்., போட்டியில் விளையாடி வருகிறார்.

அடுத்தாண்டில் அவருக்கு 43 வயதாகும். ஆனாலும் அவர் தொடர்ந்து விளையாடுவார். மைதானத்தில் அவருக்கு இணையாக வேகமாக ஓடக் கூடியவர்கள் யாரும் இல்லை. அப்படி யாராவது தன்னை முந்தினால் ஓய்வு பெறுவதாக தோனி கூறியுள்ளார். அதுபோலத் தான் பிரதமர் மோடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top