தேசிய ஜனநாயக கூட்டணி ஏற்கனவே பெரும்பான்மையை தாண்டிவிட்டதாகவும், தற்போது 400க்கும் அதிகமான தொகுதிகளை நோக்கி செல்வதாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். அதில், காஷ்மீரில் வாக்கு சதவீதம் அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும், அங்குள்ள வாக்குச்சாவடிகளுக்கு வெளியே மக்கள் உற்சாகமாக வரிசையில் நிற்கும் படங்கள் காண முடிந்தது எனவும் கூறினார். எந்தவொரு ஜனநாயகத்திற்கும் வாக்களிப்பதில் மக்கள் பங்கேற்பது முக்கியமானது.
2014ஆம் ஆண்டு மக்கள் மத்தியில் சென்றபோது அவர்களின் எதிர்பார்ப்புகளை அறியும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அவர்கள் மாற்றத்தையும், வளர்ச்சியையும் விரும்பியதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
உலகின் பல்வேறு பகுதிகளில் போர் சூழல் நிலவி வருவதாகவும், இதனால் பல நாடுகளின் பொருளாதாரம் பாதித்துள்ளதாகவும் தெரிவித்த பிரதமர், ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
4ஆம் கட்ட தேர்தல் நிறைவடைந்த போது தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்றுவிட்டதாகவும், தற்போது 400 தொகுதிகளை நோக்கி செல்வதாகவும் பிரதமர் மோடி கூறினார்.