அரியானா மாநிலம் மகேந்திரகாரில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மே 23) இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய அவர், இண்டி கூட்டணி வகுப்புவாதம், சாதியவாதம், வாரிசு அரசியல் நிறைந்ததாக இருக்கிறது. அரியானாவில் ஒவ்வொருவரும் ‘ராம் ராம்’ என்று சொல்கிறார்கள். ஆனால், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், ‘ராம் ராம்’ என்று சொல்பவர்களை கைது செய்து விடும்.
காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தவரை, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதிக்கவில்லை. ராமர் கோவில் கும்பாபிஷேக அழைப்பையும் நிராகரித்தது. காங்கிரஸ் இளவரசரின் ஆலோசகர் ஒருவர், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோவிலுக்கு பூட்டு போட விரும்புவதாக தெரிவித்தார். மக்களின் பக்தியை காங்கிரஸ் இழிவுபடுத்துகிறது.
இந்த தேர்தலில் நீங்கள் பிரதமரை தேர்ந்தெடுப்பது மட்டுமின்றி, நாட்டின் எதிர்காலத்தையும் முடிவு செய்யப் போகிறீர்கள். ஒருபுறம், மக்களின் சேவகன் மோடி இருக்கிறான். மற்றொரு புறம் யார் இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை. இண்டி கூட்டணி ஆண்டுக்கு ஒரு பிரதமர் வீதம் 5 ஆண்டுகளுக்கு 5 பிரதமர்களை தேர்ந்தெடுக்க விரும்புகிறது. இப்படியெல்லாம் நாட்டை நடத்த முடியுமா? பிரதமர் பதவிக்கு அங்கு சண்டை நடக்கிறது. பசு, பால் தருவதற்கு முன்பே நெய்க்கு சண்டை நடக்கிறது.
எஸ்.சி., எஸ்.டி. மற்றும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை பறித்து தனது வாக்கு வங்கிக்கு அளிக்க இண்டி கூட்டணி விரும்புகிறது. நான் உயிருடன் இருக்கும்வரை அதை அனுமதிக்க மாட்டேன். மேற்கு வங்காளத்தில் கடந்த 12 ஆண்டுகளில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட ஓ.பி.சி. சான்றிதழ்களை கொல்கத்தா உயர்நீதிமன்றம் ரத்து செய்திருப்பதை பத்திரிகைகளில் படித்து இருப்பீர்கள். நீதிமன்றம் இல்லாவிட்டால் என்ன ஆகி இருக்கும்?
ஆனால், மேற்கு வங்காள மாநில முதல்வர் அந்த தீர்ப்பை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொல்கிறார். அவர் முஸ்லிம்களுக்கு, குறிப்பாக ஊடுருவல்காரர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க விரும்புகிறார். இதுபோல், காங்கிரஸ் கட்சி, தனது வாக்கு வங்கிக்காக நாட்டை பிளவுபடுத்தி, 2 முஸ்லிம் நாடுகளை உருவாக்கி உள்ளது’’ என்று அவர் பேசினார்.