சுவாமி விவேகானந்தர் இந்தியா முழுவதும் பயணம் செய்த போது 1892-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தென்கோடியில் உள்ள கன்னியாகுமரிக்கு வந்தார். அங்கு குமரிக்கடலின் நடுவே இருந்த பகவதி அம்மன் தவம் இருந்ததாக கருதப்படும் ஸ்ரீபாத பாறையில் தவம் செய்ய வேண்டும் என்று விரும்பினார். இதற்காக அங்கிருந்த மீன்பிடி படகோட்டியிடம் அங்குள்ள பாறையில் இறக்கி விட முடியுமா? என்று கேட்டார். அதற்கு பணம் கொடுத்தால் படகில் ஏற்றி பாறையின் அருகில் கொண்டு விடுகிறேன் என்று கூறியுள்ளார்.
பணம் இல்லாததால் கடலுக்குள் அப்படியே குதித்த சுவாமி விவேகானந்தர் அலைகளுக்கு இடையே நீந்தி சென்று அந்த பாறையில் அமர்ந்து டிசம்பர் மாதம் 3 நாட்கள் தவம் செய்தார். அப்படி சுவாமி விவேகானந்தர் கடலின் நடுவில் தியானம் செய்த பாறையில் தான் தற்போது நினைவு மண்டபம் எழுந்தருளியுள்ளது. தற்போது அது கடலுக்குள் ஒரு காலப்பெட்டகமாக காட்சி அளிக்கிறது என்றே கூறலாம்.
கடலின் நடுவில் உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 3 படகுகள் இயக்கப்பட்டு வருகிறது. காலை 8 மணி வரை மாலை 4 மணி வரை மண்டபத்தை பார்க்க அனுமதிக்கப்படும். அந்த வகையில் 1970-ம் ஆண்டு முதல் கடந்த 2019-ம் ஆண்டு வரை 6 கோடி மக்கள் விவேகானந்தர் மண்டபத்தை பார்த்து ரசித்திருந்தனர். இந்த எண்ணிக்கை கடந்த 5 வருடங்களில் மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் தான் பிரதமர் மோடி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தியானத்தை நேற்று (மே 30) தொடங்கியுள்ளார். உலக அளவில் சக்தி வாய்ந்த தலைவராகவும், மதிப்புமிக்கவராகவும் திகழ்ந்து வரும் பிரதமர் நரேந்திர மோடி இங்கு தியானம் செய்ததால் விவேகானந்தர் நினைவு மண்டபம் சர்வதேச அளவிலான கவனத்தைப் பெற்றுள்ளது. இதனால் வரும் காலங்களில் வெளிநாடுகளில் இருந்தும், வடமாநிலங்களில் இருந்தும் கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வருகை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.