மம்தாவை தொடர்ந்து ஸ்டாலினும் இண்டி கூட்டணி கூட்டத்தில் பங்கேற்காமல் நழுவல்!

நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகள் வெளியாக மூன்று நாட்கள் உள்ள நிலையில், நாளை (ஜூன் 1) இண்டி கூட்டணி சிறப்பு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்க போவதில்லை என்று அறிவித்திருந்தார். இதில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின் பங்கேற்க மாட்டார் எனவும், அவருக்கு பதிலாக திமுக எம்.பி., டி.ஆர்.பாலு பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இதுவரை ஆறு கட்டம் முடிந்து விட்டது. நாளை (ஜூன் 1) ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட தேர்தலும், 4ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், பிரதமர் யார் என்பதை முடிவு செய்ய, இண்டி கூட்டணி தலைவர்கள், ஜூன் 1ல் கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். அதற்காக டெல்லியில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்க அக்கூட்டணி தலைவர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என மேற்குவங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா ஏற்கனவே அறிவித்திருந்தார். நாடாளுமன்றத் தேர்தலிலும், மேற்குவங்க மாநிலத்தில் இண்டி கூட்டணியாக போட்டியிடாமல், தனித்து களம் கண்டதால் மம்தா இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

முதலில் இண்டி கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார் என்று தகவல் வெளியானது. தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலினும் இண்டி கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டாலினுக்கு பதிலாக திமுக எம்.பி., டி.ஆர்.பாலு பங்கேற்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி அலை வீசி வருகிறது. வருகின்ற தேர்தல் முடிவுகளில் பாஜக கூட்டணியே அதிக இடங்களை பிடிக்கும் என தேர்தலுக்கு முன்பே எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் தகவல் வெளியானது.

இண்டி கூட்டணி வெற்றி பெறுமா என்றே தெரியாத நிலையில் முன்கூட்டியே கூட்டம் நடத்துவது எந்த வகையிலும் பலனளிக்காது என அவர்கள் உணர்ந்துள்ளனர். இதன் காரணமாகவே இக்கூட்டத்தை மம்தா மற்றும் ஸ்டாலின் தவிர்த்து உள்ளனர்.எனவே நாளை நடைபெற உள்ள கூட்டத்தில் இண்டி கூட்டணி சார்பிலான பிரதமர் வேட்பாளரை முடிவு செய்வது சந்தேகமே.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top