தோல்வியை முன்கூட்டியே தெரிந்து கொண்டதால் இண்டி கூட்டணி நடத்தும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவில்லை என, திருவண்ணாமலையில் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இன்று (ஜூன் 1) திருவண்ணாமலையில் தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார். அதன் பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் காவல்துறை அதிகாரி வெள்ளதுரை சஸ்பெண்ட் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதில்;
தனது பணியின் கடைசி நேரத்தில் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் என்றால் அது அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணமாக இருக்கும் என்றுதான் நான் பார்க்கிறேன். வெள்ளதுரையின் வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் நீதிமன்றம் பார்த்துக் கொள்ளும். எனவே இதனை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றார்.
மேலும், பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகை குறித்துகாங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனரே என்ற கேள்விக்கு, ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, அவர்கள் இன்று, நாளை மற்றும் அதற்கு மறுநாள் என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம். அதற்கு அவர்களுக்கு ஜனநாயகத்தில் உரிமை உள்ளது. இதனை தடுப்பதற்கு எங்களுக்கோ அல்லது பத்திரிகை நண்பர்களுக்கோ உரிமை கிடையாது என்று கூறினார்.
இண்டி கூட்டணி சார்பில் இன்று டெல்லியில் ஒரு ஆலோசனை நடத்துவதாக சொன்னார்கள். கடைசியில் அந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் செல்லவில்லை. எந்த ஒரு பெரிய தலைவர்களும் செல்லவில்லை. அதற்கு மாறாக அனைத்துக்கட்சிகளில் இருந்தும் இரண்டாம் கட்டத்தலைவர்களை அனுப்பியுள்ளனர்.
நேற்று காங்கிரஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இன்று நடைபெற உள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் எந்த ஒரு தொலைக்காட்சி விவாதங்களிலும் காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்கள் பங்கேற்க மாட்டார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
இதில் இருந்து என்ன நாம் தெரிந்து கொள்வது என்றால், இண்டி கூட்டணி படுதோல்வியை சந்திக்கும் என்று அவர்களுக்கு தெரிந்துவிட்டது. மக்கள் பாஜகவிற்குதான் வாக்களித்திருக்கிறார்கள் என்று தெரிந்ததால் இண்டி கூட்டணி கூட்டத்தில் முக்கிய தலைவர்கள் பங்கேற்கவில்லை.
மேலும், தேர்தல் நடைபெறும் வரை ஸ்டாலின் துணை பிரதமராக வருவார் என்று எல்லாம் திமுகவினர் சொல்லி வந்தனர் .இவை அனைத்தும் தேர்தல் முடிவுகள் வெளிவரும் வரை தான். முடிவுகள் வெளிவரும்போது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக மீண்டும் பிரதமராக பதவி ஏற்பார்
இதற்கிடையே தனிப்பட்ட நிகழ்வாக பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வருகை புரிந்துள்ளார். அவரை வரவேற்க பாஜகவினர் யாரும் செல்லவில்லை. அதே நேரத்தில் அந்த மாவட்டத்தின் ஆட்சியர் சொல்லியுள்ளார்,விவேகானந்தா பாறை என்பது விவேகானந்தா கேந்திராவின் சொத்து. அது ஒரு தனியார் சொத்து. அதனை மக்கள் நாம் எல்லோரும் பயன்படுத்திக் கொள்கிறோம். எனவே அதற்கு அரசின் அனுமதி, தேர்தல் ஆணையத்தின் அனுமதி தேவையில்லை என்று. நேற்று நாம் பார்த்திருப்போம், பிரதமர் ஒருபுறம் அமைதியாக தியானம் செய்து கொண்டிருக்கிறார். மறுபுறம் மக்கள் விவேகானந்தா பாறைக்கு சென்று வந்துள்ளனர். அவர்களை யாருமே தடுக்கவில்லை.
எனவே எதிர்க்கட்சிகள் விஷமத்தனமான பிரச்சாரங்களை செய்கின்றனர். எதை எல்லாம் அரசியல் செய்வது என்று தெரியாமல் செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வின்போது பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன், திருவண்ணாமலை மாவட்ட பாஜக தலைவர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.