பக்ரைன் அரசால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 28 பேர் விரைவில் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்புவார்கள் என தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்; பக்ரைன் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 28 பேரை மீட்டுக் கொண்டு வர மத்திய அரசு உதவ வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு நான் 18.10.2024 அன்று கடிதம் எழுதி இருந்தேன்.
பக்ரைன் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டிருந்த மீனவர்களுக்கு ஆறு மாதகாலம் சிறை தண்டனை வழங்கப்பட்டிருந்தது. நமது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மேற்கொண்ட நல்லெண்ண முயற்சிகள் காரணமாக நமது மீனவர்களை மூன்று மாத காலத்தில் விடுதலை செய்வதாக அந்நாட்டு அரசு உறுதி அளித்திருக்கிறது. மேலும் நம் மீனவர்கள் அனைவரும் ஆரோக்யமாக இருப்பதாக நமது தூதரக அதிகாரிகள் முலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
நமது மீனவர்கள் அனைவரும் மத்திய அரசின் சீரிய முயற்சியால் விரைவில் நலமுடன் நாடு திரும்புவார்கள் என்பது நிதர்சனம். கோரிக்கை வைத்த உடன் விரைந்து நடவடிக்கை எடுத்த பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசுக்கும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கும் தமிழக மீனவர்கள் சார்பிலும், தமிழக பாஜக சார்பிலும் நன்றி! நன்றி! நன்றி! எனக்குறிப்பிட்டுள்ளார்.