விருதுநகரில் திமுக அரசின் அராஜகத்தால் பறிமுதல் செய்யப்பட்ட பாரத மாதா சிலை, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுப்படி மீண்டும் பாஜகவிடம் ஒப்படைக்கப்பட்டது.
விருதுநகர் கூரைக்குண்டு அருகே நான்கு வழிச்சாலையில் பட்டா நிலத்தில் மாவட்ட பா.ஜ.க தலைமை அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் கடந்த 2023ல் பாரத மாதா சிலை நிறுவப்பட்டது. ஆனால் மக்கள் விரோத திமுக அரசு தனது ஏவல்துறையை வைத்து பாரத மாதா சிலையை இரவோடு, இரவாக எடுத்துச்சென்றது.
இதையடுத்து முன்னறிவிப்பின்றி பட்டா இடத்திற்குள் நுழைந்து பாரத மாதா சிலையை எடுத்து சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், சிலையை திரும்ப ஒப்படைக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி மாவட்ட பாஜக நிர்வாகி ராஜகோபால் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். வழக்கு விசாரணையில் மீண்டும் பாரத மாதா சிலையை பாஜகவினரிடமே ஒப்படைக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி நேற்று (நவம்பர் 18) பாரத மாதா சிலையை தாலுகா அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொண்டு ஊர்வலமாக எடுத்துச்செல்ல காவல்துறையிடம் மாவட்ட பாஜக சார்பில் அனுமதி கோரப்பட்டது. அனுமதி வழங்கியதால் மாலை 4 மணிக்கு மேல் பாஜக மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர்கள் தாலுகா அலுவலகத்தில் குவிந்தனர்.
பாஜகவினருக்கு ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்த பாதை வழியாக ஊர்வலமாக செல்ல தயாராகி கொண்டிருந்தனர். அப்போது எஸ்.பி கண்ணன் திடீரென அந்தப் பகுதி வழியாக செல்லக் கூடாது என பாஜகவினரை தடுத்து நிறுத்தினார். இதனால் 4 மணி நேரமாக பாஜகவினர் போராட்டம் நடத்தினர். காவல்துறை திட்டமிட்டு ஊர்வலத்தை தடுத்து நிறுத்தியதுடன், சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி சிலையை மீண்டும் கைப்பற்றும் நோக்கத்துடன் செயல்பட்டதாக அங்கிருந்த பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இந்தநிலையில், அனுமதி வழங்கப்பட்டிருந்த பாதை வழியாக சிலையை எடுத்துசெல்ல போலீசார் மறுப்பு தெரிவித்தனர். மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் உடன் டி.எஸ்.பி., ஏ.டி.எஸ்.பி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். முதலில் கூறியபடி எடுத்துச்செல்வோம் என பாஜகவினர் போலீசாரிடம் தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாரத மாதா சிலை இருந்த வாகனம் முன் அமர்ந்து தேச பக்தி பாடல்களை பாடினர்.
இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையில் நான்கு வழிச்சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டது. நீண்ட ஆலோசனைக்கு பின் பாஜகவினர் ஏற்றுக்கொண்டனர். ஆனால் தாலுகா அலுவலக வாயில்களில் போலீசார் வாகனங்கள் மறித்து நிறுத்தியிருந்தனர். மீண்டும் தொண்டர்கள் ஆவேசமடைந்து போலீசாரிடம் ஏன் வாகனங்களை மறித்து நிறுத்தியுள்ளனர் என கேள்வி எழுப்பினர்.
அப்போது எஸ்.பி., கண்ணன் வந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி ஊர்வலமாக செல்ல அனுமதி மறுத்தார். இவரது பேச்சு தொண்டர்களை மேலும் கொதிப்படைய செய்தது.
இதையடுத்து எஸ்.பி., கண்ணன் முதலில் கட்சியினரை மாவட்ட பாஜக அலுவலகத்திற்கு அனுப்பி விடுங்கள் என மாவட்ட தலைவர் பாண்டுரங்கனிடம் கூறினார். இதன் பின்னர் கட்சியினர் முதலில் பாஜக அலுவலகம் சென்ற பின், பலத்த போலீசார் பாதுகாப்புடன் பாரத மாதா சிலை மாவட்ட அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன் பின்னர் மாவட்ட அலுவலகத்தில் பாரத மாதா சிலை வைக்கப்பட்டு மாலை அணிவித்து நிர்வாகிகள், தொண்டர்கள் வணங்கினர். அதனைத்தொடர்ந்து மாவட்ட தலைவர் பாண்டுரங்கன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநில தலைவர் அண்ணாமலை அவர்கள் என் மண், என் மக்கள் யாத்திரையின் போது விருதுநகர் வரும் அவரை வைத்து பாரத மாதா சிலையை திறக்க முடிவு செய்தோம். அதற்காக வைத்த சிலையை இரவோடு, இரவாக போலீசார் அகற்றி வருவாய்த்துறையிடம் ஒப்படைத்தனர். அப்போது பாரத மாதா சிலையை நிறுவுவோம் என தலைவர் அண்ணாமலை சூளுரைத்தார். உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பின்படி நேற்று சிலையை பெற்றுக் கொள்ள தாலுகா அலுவலகம் வந்தோம். மெயின் பஜார் வழியாக ஊர்வலமாக சென்று தெப்பத்தில் நீர் எடுத்து அபிஷேகம் செய்து அலுவலகத்தில் வைக்க இருந்தோம்.
இறுதி வரை போலீசார் அதற்கு அனுமதி வழங்கவில்லை. அலுவலகம் மட்டும் தான் செல்ல வேண்டும், வேறு எங்கும் செல்லக்கூடாது என்றனர். நாங்களும் அமைதியான முறையில் வந்து விட்டோம். தலைவர் அண்ணாமலை லண்டனில் இருந்து வந்த பின் அவரின் சபதம் நிறைவேறும் வகையில் அவர் கைகளால் பாரத மாதா சிலை நிறுவப்படும். இவ்வாறு அவர் கூறினார்.