பாரதிய ஜனதா கட்சியின் மாநில அளவிலான அமைப்பு தேர்தல் பயிலரங்கம் இன்று (நவம்பர் 26) கரூரில் நடைபெற்றது.
இதுகுறித்து தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா கூறியிருப்பதாவது:
பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு பருவம் 2024 பணிகளுக்கான மாநில அளவிலான அமைப்பு தேர்தல் பயிலரங்கம் இன்று கரூரில் நடைபெற்று வருகிறது.
இன்றைய தினம் இந்திய அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு அண்ணல் அம்பேத்கரின் திருவுருவ படத்தை வணங்கி மரியாதை செலுத்தி நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
உறுப்பினர் சேர்க்கை நிறைவு, தீவிர உறுப்பினர் சரிபார்ப்பு பணிகள் நிறைவடைந்து கிளை தேர்தல்கள் தொடங்கியுள்ள நிலையில், அதைத்தொடர்ந்து மண்டல் தேர்தல் மற்றும் மாவட்ட தேர்தல் நடத்துவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொள்வதற்கான வழிகாட்டும் நெறிமுறைகள் இந்த பயிலரங்கத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
தேசிய தலைமையின் சீரிய வழிகாட்டுதல் படி தமிழகத்தில் வெற்றிகரமாக அமைப்பு தேர்தல் 2024 நடத்தி முடிப்பதற்கான விஷயங்கள் முன்வைக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாநில மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., தமிழக பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி மற்றும் மாநில, மாவட்ட, மண்டல் நிர்வாகிகள், மாவட்ட தேர்தல் பொறுப்பாளர்கள், மண்டல் தேர்தல் பொறுப்பாளர்கள் இந்த பயிலரங்கத்தில் கலந்துகொண்டனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.