ஊட்டி நகராட்சி ஆணையராக இருந்தபோது லஞ்சம் வாங்கியவர் ஜஹாங்கீர் பாஷா என்பதால் முதல்வரின் இரும்புக்கரம் செயலிழந்துவிட்டதா என, தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு அமைப்பாளர் ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்; நவம்பர் 9 ஆம் தேதி ஊட்டியில் 11.70 லட்சம் ரூபாய் லஞ்சப் பணத்துடன் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் கையும் களவுமாக பிடிபட்ட ஊட்டி நகராட்சி ஆணையர் ஜஹாங்கீர் பாஷாவை பணியிடை நீக்கம் செய்து சிறையில் அடைக்காமல் அவரை திருநெல்வேலி மாநகராட்சி உதவி கமிஷனராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டிருப்பது ஒரு அரசு அதிகாரி லஞ்சம் வாங்குவதையும், ஊழல் செய்வதையும் நேரடியாக ஊக்குவிக்கும் செயல் என்பது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியாதா?
ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரு ஆட்சியை தமிழகத்தில் நடத்திய ஒரு தலைவரின் வாரிசு நடத்தும் ஆட்சியில் அரசு நிர்வாகம் வேறு எப்படி இருக்கும்? ஒருவேளை தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க நினைத்தாலும் தவறு செய்தவரின் பெயர் ஜஹாங்கீர் பாஷா என இருப்பதால் மாண்புமிகு இரும்புக்கரம் செயலிழந்துவிட்டதா? இவ்வாறு ஹெச்.ராஜா கூறியுள்ளார்.