விஸ்வகர்மா திட்டத்தை முடக்கி பாரம்பரிய கலைகளை அழிக்கும் முயற்சியில் ஸ்டாலின் ஈடுபடுகிறார்: கே.பி.ராமலிங்கம் கண்டனம்

தமிழகத்தில் விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த விடாமல் முடக்கி, அதன் மூலம் பாரம்பரிய கலைகளை அழிக்கும் முயற்சியில் முதல்வர் ஸ்டாலின் ஈடுபடுகிறார் என, பாஜக துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியில் தியாகி சுப்பிரமணிய சிவா மணி மண்டபம் வளாகத்தில் பாரத மாதா கோவில் அமைந்துள்ளது. பாஜக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக கடந்த 2022 ஆகஸ்ட் 11ம் தேதி துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் சென்றனர். அப்போது வேண்டும் என்றே திமுக அரசு, பாரத மாதா கோவில் நுழைவு வாயிலுக்கு பூட்டு போட்டு வைத்திருந்தது. ஏற்கனவே அனுமதி பெற்றுதான் வந்துள்ளோம் ஏன் நுழைவு வாயிலுக்கு பூட்டு போட்டுள்ளீர்கள் என்று நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அங்கிருந்த பணியாளர்களிடம் கேள்வி எழுப்பினர். இதன் பின்னர் கதவை திறந்த நிர்வாகிகள், பாரத மாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துவிட்டு அனைவரும் அமைதியாக சென்றனர்.

ஆனால் பாஜகவினர் அத்துமீறி பாரத மாதா கோவிலின் பூட்டை உடைத்து விட்டனர் என திமுக அரசு பொய் வழக்கு போட்டு கே.பி.ராமலிங்கம் உட்பட பல நிர்வாகிளை கைது செய்தது. இதன் பின்னர் அவர்கள் அனைவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதன் வழக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக தருமபுரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், திமுக அரசு போட்ட பொய் வழக்கிற்காக தருமபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம் மற்றும் மாவட்ட தலைவர் பாஸ்கர் உட்பட பல நிர்வாகிகள் இன்று (நவம்பர் 28) ஆஜராகினர்.

அதன் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கே.பி.ராமலிங்கம் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழகத்தின் எதிர்காலத்தை பாதிக்கும் வகையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள கைவினை கலைஞர்கள், சிற்பக் கலை வல்லுநர்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளோரின் வளர்ச்சிக்காக விஸ்வகர்மா திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை சாதி அடிப்படையிலான திட்டம் போல் சித்தரித்து தமிழக அரசு ஏற்காது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது, அப்பட்டமாக தமிழக மக்களை வஞ்சிக்கும், ஏமாற்றும் செயல். எதிர்காலத்தில் தமிழர்களின் பண்பாடு, நாகரிகம், கலச்சாரம் உலக அரங்கில் போய் சேரக் கூடாது என்ற நிலையை உருவாக்கும் நடவடிக்கை இது. இதுபோன்ற பல பாரம்பரிய கலைகள் பல்வேறு காரணங்களால் அழிந்து வருகிறது. இந்த சூழலில் தமிழக முதல்வர் அவைகளை மேலும் அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்தியாவின் இதர மாநிலங்கள் அனைத்திலும் இந்த திட்டம் ஏற்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், தமிழகத்தில் மட்டும் மறைமுக தாக்குதல் நடக்கிறது. வாக்களித்த மக்களுக்கு முதல்வர் செய்கிற மிகப்பெரிய துரோகம் இது. சுய நலனுக்காக, அரசியல் நலனுக்காக எதையும் செய்யலாம் என நினைப்பது நாட்டின் வளர்ச்சியை மிகவும் பாதிக்கும்.

60 ஆண்டுகளுக்கு முன்பு குலத்தொழில் என்றெல்லாம் கூறி ராஜாஜியை பழித்த செயலை இப்போதும் ஆரம்பித்துள்ளார்கள். ராஜாஜி அன்று நாட்டுக்காக செய்த சாதனைகளை எல்லாம் மறைப்பதற்காக எடுத்த முடிவுகள் அவை.

கலைகள் அழியாமல், தமிழகத்தின் நாகரிகம், பண்பாடு பாதுகாக்கப்பட வேண்டும் எனில் மத்திய அரசு கொண்டுவந்துள்ள விஸ்வகர்மா திட்டத்தை செயல்படுத்த வரைமுறைகளை ஏற்படுத்தலாம். விஸ்வகர்மா திட்ட பயனாளிகளை தேர்வு செய்யும் அதிகாரம் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதை மறுத்து கிராம நிர்வாக அலுவலரிடம் இதற்கான உரிமையை வழங்க வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். இது முட்டாள் தனம். மத்திய அரசுக்கு ஆலோசனை கூறும்போது நல்லவற்றை கூற வேண்டும். யார் கூறி முதலமைச்சர் இதை அறிவித்தார் என தெரியவில்லை. ஆனால், முதல்வர் தன்னை திருத்திக் கொண்டு இந்த அறிக்கையை வாபஸ் பெற வேண்டும்.

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளிநாட்டில் இருக்கிறார் என்ற காரணத்தால் இதுபோன்ற தான் தோன்றித் தனமான செயல்களை முதல்வரும், ஆளும் கட்சியும் செய்கின்றனரோ என கருதுகிறோம்.

திமுக எதிர்கட்சியாக இருந்தபோது, தருமபுரி மாவட்டத்தில் சுரங்கங்களில் தவறுகள் நடைபெறுகிறது, இதற்கு அரசு அதிகாரிகள் துணையாக உள்ளனர் என திமுக-வைச் சேர்ந்த வழக்கறிஞர் தாமரை செல்வன் வழக்கு தொடர்ந்தார். ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனால் அந்த வழக்கறிஞருக்கு நீதிமன்றம் ரூ.3 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இதன் மூலம் வழக்கறிஞர் சமுதாயத்துக்கே அவமானம் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கை வாபஸ் பெற்றதன் பின்னணி சொந்த ஆதாயம் தேட வேண்டும் என்பதாகும். இதுபோன்று சொந்த ஆதாயத்துக்காக கட்சி நடத்தும் திமுக-வினர் தற்போது விஸ்வகர்மா திட்டத்தையும் அதற்காகத் தான் எதிர்க்கிறார்கள். இவ்வாறு கே.பி.ராமலிங்கம் கூறினார்.
இந்த பேட்டியின்போது தருமபுரி மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர் மற்றும் துணைத்தலைவர் பாடி முரளி, கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் இமானுவேல், கே.மணி, மௌனகுரு மற்றும் பாஜக வழக்கறிஞர் சங்கீதா உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top