தீர்வு கொடுக்காமல் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விஜய்: தலைவர் அண்ணாமலை காட்டம்

எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றப் போகிறாரா? அல்லது எரிகிற நெருப்பை அனைத்துவிட்டு அதற்கான தீர்வை கொடுக்க போகிறாரா? என தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னையில் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் நேற்று (ஜனவரி 20) கூறியதாவது: சென்னை விமான நிலையம் வெறும் ஆயிரம் ஏக்கரில் மட்டுமே அமைந்துள்ளது. டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்கள் 5 ஆயிரம் ஏக்கரிலும், பெங்களூரில் 4 ஆயிரம் ஏக்கரிலும் விமான நிலையம் அமைந்துள்ளது. சென்னை வளர்ச்சி அடைந்து வருவதால், ஆயிரம் ஏக்கரை வைத்துக் கொண்டு விமான நிலையத்தை எப்படி நடத்த முடியும். சென்னை விமான நிலையம் ஆண்டுக்கு இரண்டரை கோடி பயணிகளை கையாளுகிறது. இதுவே அடுத்த 10 ஆண்டுகளில், ஆண்டுக்கு 10 கோடி பயணிகள் என்ற நிலை உருவாகும். எனவே, சென்னைக்கு புதிய விமான நிலையம் வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

தமிழகத்தில் விமான நிலையம் அமைவதற்கான இடத்தை மாநில அரசுதான் தேர்வு செய்கிறது. 2019-ம் ஆண்டு அதிமுக ஆட்சியில், விமான நிலையம் அமைவதற்காக இடத்தை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு அனுப்பிய பட்டியலில் பரந்தூரும், மாமண்டூரும் இடம்பெற்றிருக்கிறது. 2021-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மாமண்டூரை நீக்கிவிட்டு பரந்தூர், பண்ணூரை தேர்வு செய்து மத்திய அரசுக்கு அனுப்பியது.

இதில் மத்திய அரசு பல ஆய்வுகள் நடத்திய பிறகுதான், மாநில அரசு அனுப்பிய பட்டியலில் இருந்து பரந்தூரை தேர்வு செய்தது. அதிமுக, திமுக ஆகிய இரண்டு அரசுகளும் அனுப்பிய பட்டியலில் பரந்தூர் இடம் பெற்றிருந்தது. இடத்தை தேர்வு செய்ததில் மத்திய அரசுக்கு ஒரு சதவீதம் கூட பங்கு கிடையாது. சென்னை அருகில் விமான நிலையம் வேண்டும் என்பதை விஜய் புரிந்து கொள்ள வேண்டும். அதை எங்கு கட்ட வேண்டும் என்பதை தேர்வு செய்து கொடுக்க வேண்டிய பொறுப்பு மாநில அரசினுடையது.

சென்னைக்கு அருகில் விமான நிலையம் வேண்டாம் என்கிறாரா விஜய், விமான நிலையம் வேண்டும் என்றால், எந்த இடத்தை தேர்வு செய்து அவர் கொடுப்பார், ஏனென்றால், பரந்தூரில் மக்களை சந்தித்த விஜய், விமான நிலையம் வேறு எங்கு கட்ட வேண்டும் என்ற தீர்வையும் கொடுத்திருக்க வேண்டும். டங்ஸ்டன் பிரச்சினை வேறு, விமான நிலைய பிரச்சினை வேறு. எனவே, பிரச்சினைகளை ஆக்கப்பூர்வமாக கையாண்டு தீர்வு கொடுப்பவர்கள்தான் நல்ல அரசியல்வாதியாக வருவார்கள்.

எரிகிற நெருப்பில் விஜய் எண்ணெய் ஊற்றப் போகிறாரா அல்லது எரிகிற நெருப்பை அனைத்துவிட்டு அதற்கான தீர்வை கொடுக்க போகிறாரா?

நடிகர் விஜய் கட்சி தொடங்கி ஒராண்டாகிறது. இந்த ஓராண்டாக பரந்தூர் பக்கம் விஜய் ஏன் செல்லவில்லை. இவ்வளவு நாட்கள் என்ன செய்தார், விஜய் மக்களை சந்தித்தது அரசியலா அல்லது ஆக்கப்பூர்வமான அணுகுமுறையா, டங்ஸ்டன் விவகாரத்தில் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை ஜனவரி 22-ம் தேதி சந்தித்து அதற்கு நிரந்தர தீர்வை கொடுக்க இருக்கிறோம். யுஜிசி வரைவு வழிகாட்டு முறைகளை பாஜக வரவேற்கிறது. இவ்வாறு தலைவர் அண்ணாமலை கூறினார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top