திமுக என்றாலே தரம் இல்லாமல் விமர்சிப்பது, கலகம் விளைவிப்பது, மேடையில் ஒருமையில் அருவருக்கத்தக்கதை
பேசி கண்ணியத்தை காப்பதுதான் திராவிட மாடல் நாகரிகம். அந்தவகையில், ஆளுநர் குறித்து தவறான
வாசகங்களுடன் திமுக உடன் பிறப்புகள் தமிழகம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டி வருகின்றனர். இதற்கு
பாஜகவின் தேசிய மகளிர் அணித்தலைவியும், கோவை தெற்கின் சட்ட மன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன்
கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை வளாகத்தில் அவர் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ஆளுநர் ஒரு கருத்தைக்
கூறுகிறார்; அதை அவர் கட்டாயப்படுத்தவில்லை. ஆளுநர் சொல்லும் கருத்துகளுக்கு மாற்று கருத்துகள் இருந்தால்,
அதைக் கருத்தால்தான் எதிர்கொள்ள வேண்டும். அதைவிட்டு, ஆளுநருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டுவது
கண்டிக்கத்தக்கது. அது கருத்துகளுக்கு மரியாதை அளிக்கும் பண்பு எப்படி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.
பொங்கல் விழா தொடர்பாக ஆளுநரின் அழைப்பிதழில் தமிழகம் எனக் குறிப்பிடப்பட்டிருப்பது குறித்து கேட்கிறீர்கள்.
அனைத்து ஊடகங்களும் தமிழக ஆளுநர் என்றுதானே குறிப்பிடுகின்றன? மாநில அரசு விளம்பரங்களில்
தலைநிமிர்கிறது தமிழகம் என்று சொல்லவில்லையா? தமிழகம் என்ன சட்டவிரோத வார்த்தையா? இந்திய
ஒருமைப்பாட்டுக்கு எதிரான வார்த்தையா?
திமுக ஆட்சியில் பால் விலை உயர்வு உள்பட பல்வேறு பிரச்னைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் திசை
திருப்புவதற்காகவே இதுபோன்ற பிரச்னைகள் எழுப்பப்படுகின்றன என்றார் அவர்.