தமிழ் மக்களின் ஆன்மீக உணர்வுகளைத் தொடர்ந்து புண்படுத்தும், இந்து சமய அறநிலையத்துறையைக் கண்டித்து, பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என ஆன்மீகம் மற்றும் ஆலயம் மேம்பாட்டு பிரிவின் தலைவர் நாச்சியப்பன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது.
“தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில், திறனற்ற திமுக அரசிலும், அறமற்ற இந்து சமய அறநிலையத் துறையிலும் தொடர்ந்து அரங்கேற்றி வரும் அவலங்களை எல்லாம் வெளிப்படுத்தும் விதமாக, மாபெரும் அடையாள உண்ணாவிரத போராட்டம், வரும் ஜனவரி 21ஆம் தேதி, சனிக்கிழமை காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே, நடைபெற இருக்கிறது.
• திருக்கோவில் நிலங்கள் எல்லாம் சூறையாடப்படுகிறது.
• திருக்கோயில் மரபுகள் எல்லாம் மீறப்படுகிறது.
• கணக்கில்லாமல் கோவில்கள் இடிக்கப்படுகிறது.
• புராதன கோவில் நகைகள் உருக்கப்படுகிறது.
• பக்தர்களின் காணிக்கை உண்டியல் பணங்கள் சுரண்டப்படுகிறது.
• பூஜை புனஸ்காரங்கள் நிறுத்தப்படுகிறது.
• பக்தர்களின் வருகைகள் தவிர்க்கப்படுகிறது.
• கோவில் கும்பாபிஷேகங்கள் மறுக்கப்படுகிறது.
• அறங்காவலர்கள் தக்கார்கள் நியமனங்கள் தடுக்கப்படுகிறது.
மொத்தத்தில் திருக்கோவில்கள் புனிதங்கள் கெடுக்கப்படுகிறது. மத நம்பிக்கையும், இறை நம்பிக்கையும் இல்லாமல், திருக்கோவிலின் மரபு சார்ந்த விடயங்களில் தலையிட்டு, திறனற்ற திமுக அரசு தொடர்ந்து செய்து வரும் அத்துமீறல்களால், திமுக அரசு பக்தர்களை வஞ்சித்து வருகிறது.
இதை வன்மையாக கண்டித்து, தமிழக மக்களின் ஆதரவுடன், இந்து சமய அறநிலையத்துறையின் மற்றும் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மாபெரும் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கும் மக்களுக்கான இந்த போராட்டத்தில் அனைவரும் பங்கெடுத்து எதிர்ப்பை பதிவு செய்யுமாறு அன்புடன் வேண்டுகிறோம்” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.