கர்நாடக மாநிலம், கலபுரகியில், 51 ஆயிரத்து 900 குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கி, கின்னஸ் சாதனை படைக்கப்பட்டது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, ”முந்தைய ஆட்சியாளர்கள் பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்தவில்லை.
இவற்றை வளர்ச்சி அடைய செய்வதுதான் பா.ஜ.க ,வின் முக்கிய நோக்கம்,” என்றார். 51 ஆயிரத்து 900 லம்பானி குடும்பத்தினருக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். ஒரே முறை இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இலவச பட்டாக்கள் வழங்குவது சாதனை என்பதால், இது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
முந்தைய ஆட்சியாளர்கள் பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்தவில்லை. இவற்றை வளர்ச்சி அடையச் செய்வது தான் பா.ஜ.,வின் முக்கிய நோக்கம். இதற்காகவே நாட்டின் 100 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில், கர்நாடகாவின் 10 மாவட்டங்களும் உள்ளன.இவற்றில் படிப்படியாக வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்படும். குடிநீர், சாலை உட்பட அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும். மாநில அரசு – மத்தியஅரசுடன் இணைந்து அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்கு முன்னுரிமை வழங்கி வருகிறது. வீட்டுமனை பட்டா வழங்கியதன் வாயிலாக, 50 ஆண்டுகளாக ஒடுக்கப்பட்டிருந்த சமூகத்தினரின் வாழ்வில் இப்போது தான் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இச்சமூகம், நாட்டின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருப்பதால், இவர்களுக்காக வருங்காலத்தில் மேலும் பல திட்டங்கள் கொண்டு வரப்படும். அனைத்து சமூகத்தினருக்கும், அனைத்து திட்டங்களும் கிடைக்க செய்வதற்காகவே பாடுபடுகிறோம் என்றார். இந்நிகழ்ச்சியில், கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை உட்பட மத்திய – மாநில அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர்.