மேகாலயாவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளிலும், நாகாலாந்தில் 20 தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டி யிடுகிறது. இந்த நிலையில் வட கிழக்கு மாகாணங்களில் பாஜ க தனித்து போட்டியிட்டு தனது பலத்தை நிரூபிக்க ஆயத்தமாகி வருகிறது.
வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 16-ம் தேதியும், மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் வரும் 27-ம் தேதியிலும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இது சம்பந்தமாக பாஜக செயலாளர் ரிதுராஜ் சின்ஹா டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த மக்கள், பிரதமர் நரேந்திர மோடி மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். இதை முன்னிறுத்தி மேகாலயாவின் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பாஜக போட்டியிடும். மோடியின் சக்தி என்பதை மையமாகக் கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபடுவோம்.
நாகாலாந்தில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடும். மீதமுள்ள 40 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும். மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக அபார வெற்றி பெறும், என தெரிவித்திருந்தார்.
மேகாலயாவில் முதல்வர் கான்ராட் சங்மா வின் தலைமையில் தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சியில் உள்ளது. இந்த கூட்டணியில் பாஜகவும் இடம்பெற்றிருந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியில் இருந்து விலகி பாஜக தனித்து 60 தொகுதிகளிலும் களம் காண காத்திருக்கிறது.
நாகாலாந்தில் முதல்வர் நெய்பியு ரியோ தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. ஆளும் அரசின் கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் பாஜக 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
திரிபுரா மாநிலத்தில் 2013 சட்டமன்ற தேர்தலில் பாஜக ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. 0.05 சதவீத வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தது. ஆனால் 2014 மத்தியில் மோடி அரசு பதவி ஏற்ற பின், 2018ல் நடந்த தேர்தலில் பாஜக 43.59 சதவீத வாக்குகளுடன் 36 தொகுதிகளில் அபார வெற்றியுடன் தனிப்பெரும்பான்மை பெற்றது. 5 ஆண்டுகள் பொன்னான ஆட்சியை தொடர்ந்த நிலையில் வரும் பிப்ரவரி 16ஆம் தேதி சட்டமன்ற தேர்தலிலும் தனது செல்வாக்கை காட்ட பாஜக தயாராகி வருகிறது.