சென்னை, கொட்டிவாக்கம், ஓ.எம்.ஆர்., பகுதியைச் சேர்ந்தவர் ஜான் ரவி, தொழிலதிபரும், பா.ஜ.க ஆதரவாளருமான இவர், அரசியல் தொடர்பான கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார். இவர் மீது கடந்த 21.02.2023 அன்று திமுக தலைவர் ஸ்டாலின், கருணாநிதி குறித்து, அவதுாறாக பதிவிட்டிருந்ததாக கூறி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இது தொடர்பாக திருவிடைமருதுார் அருகே, தி.மு.க. ஐ.டி விங் அளித்த புகாரின் பேரின் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தார். பின்னர் தொழில் நிமித்தமாக குஜராத்தில் இருந்த ஜான் ரவியை, பல குற்ற வழக்குகளில் தேடப்படும் கடும் குற்றவாளியை கைது செய்வது போல் 25ம் தேதி விமானத்தில் குஜராத் சென்று கைது செய்து திருவிடைமருதுாருக்கு அழைத்து வந்தனர்.
திருவிடைமருதுார் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில், நேற்று அவரை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி வரும் மார்ச் 13ம் தேதி வரை, அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும், அவர் தாக்கல் செய்த ஜாமின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட வேண்டிய பல கொலை, கொள்ளை குற்றவாளிகள் காவல்துறையின் தீவிர நடவடிக்கை இல்லாததால், இன்னும் வெளியே உலவி கொண்டிருக்க, அரசியல் காரணங்களுக்காக அவசர அவசரமாக குஜராத் வரை விமானத்தில் பறந்து சென்று ஒருவரை கைது செய்திருப்பது, தமிழக காவல்துறையையும், தமிழக அரசையும் சமூக வலைதளங்களில் கேலிக்கும் கிண்டலுக்கும் உரியதாக ஆக்கி இருக்கிறது.