கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கோவை உக்கடத்தில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு காரில் பதுக்கி வைத்திருந்த குண்டு வெடித்தது. இதில் காரில் இருந்த ஜமிஷா முபின் என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த விபத்தை சிலிண்டர் வெடிப்பு என்று தமிழக முதல்வரும், போலீசாரும் கூறிவந்த நிலையில் இந்த வழக்கை என்.ஐ ஏ., விசாரணை செய்தனர். விசாரணையில், ஜமிஷா முபின் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் 2022ம் வருடம் பிப்ரவரி மாதம், சத்தியமங்கலம் வனப்பகுதியின் ஆசனூர் மற்றும் கடம்பூர் பகுதிகளில் பயிற்சியில் ஈடுபட்டதும், சதித்திட்டக் கூட்டங்களை நடத்தியதும் தெரியவந்தது.இந்த சதி திட்டத்தில் உமர் பாரூக், முபீன், முகமது அசாருதீன், ஷேக் ஹிதயத்துல்லா மற்றும் சனோபர் அலி ஆகியோர் இணைந்து ஈடுபட்டது தெரியவந்தது.
இதே போல் கர்நாடகா மாநிலம் மங்களூரு பம்ப்வெல் பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்தது. இதில் ஆட்டோ டிரைவர் புருஷோத்தம், குக்கர் குண்டை எடுத்து வந்த தீவிரவாதி முகமது ஷாரிக் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த இரண்டு சம்பவங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது என்ற அடிப்படையில் என்.ஐ.ஏ., விசாரணையை தீவிரப் படுத்தி இருந்தது.
இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களுக்கும் இதுவரை, எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்காமல் இருந்த நிலையில், தற்போது மேற்காசிய நாடான சிரியாவில் செயல்பட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் கீழ் செயல்படும், ‘குரசான் மாகாண’ இஸ்லாமிய அரசு என்ற அமைப்பு ‘வாய்ஸ் ஆப் குரசான்’ என்னும் பத்திரிகை கட்டுரையில் பொறுப்பேற்றுள்ளது.
இதில், தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: எங்கள் தாக்குதலை, பெரிதாக எடுத்து கொள்ளவில்லையா? எங்கள் சகோதரர்கள் எங்கள் மதத்திற்காக பழிவாங்கினர். ஷாரிக், மங்களூரு கத்ரி கோவிலை தகர்க்க முயன்றார். மங்களூரு காவி பயங்கரவாதிகளின் கோட்டை. எங்கள் நோக்கம் தற்போது நிறைவேறாவிட்டாலும், அடுத்த சில நாட்களில் எங்கள் தாக்குதல் தொடரும்” என தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது: “கோயம்புத்தூர் தற்கொலை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு குராசன் மாகாணத்தில் உள்ள இஸ்லாமிய அரசு என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.திமுக கட்சி உறுப்பினர்கள் குறைந்த பட்சம் இப்போதாவது தங்கள் ”சிலிண்டர் வெடிப்பு” புரளியை கைவிடுங்கள் என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் அறிக்கை குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், தீவிரவாதிகளே நேரில் வந்து நாங்கள் தான் குண்டுவைத்தோம் எனக் கூறினாலும் ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளா மாட்டார் என்று விமர்சித்தார். அவர்களை மாற்ற முடியாது எனத் தெரிவித்தார்.