அந்நியர்களின் ஆட்சியை அகற்றவும், அகண்ட பாரதம் என்ற உன்னத நோக்கத்தை நிறைவேற்றவும் 222 ஆண்டுகளுக்கு முன்னதாகவே மாமன்னர்கள் மருதுபாண்டியர்களால்’நாவலத் தீவு பிரகடனம்’ என்னும் ’ஜம்புத்தீவு பிரகடனத்தை வெளியிட்ட நாள் இன்று’ திருச்சி மலைக்கோட்டை வாசலிலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மதில் சுவற்றிலும் பிரகடனம் ஒட்டப்பட்டது.தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கிழக்கிந்தியக் கம்பெனி ஆற்காட்டு நவாப்பிடமிருந்து நேரடியாக வரி திரட்டலை நடத்திய காலத்தில், தமிழக சிற்றரசர்கள் பரவலாக எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே ஆங்கிலேயரை எதிர்த்துப் போர் நடத்தினர்.மதுரை நாயக்கர்கள் 72 பாளையங்களாக பிரித்து ஆட்சி செய்த பகுதியில் சிவகங்கைப் பாளையத்தின் பாளையக்காரர் முத்துவடுகநாதர் கொல்லப்பட்ட பின் அவரின் தளபதிகள் மருது சகோதரர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றனர்.அக்காலம், ஆங்கிலேயரின் படைத்தளபதி கர்னல் அக்னியூ விட்ட அறிக்கைக்கு மறுப்பு தெரிவித்து திருச்சியில் சின்ன மருது வெளியிட்ட மறுப்பு அறிவிப்புதான் ஜம்புத் தீவு பிரகடனம்இந்த அறிக்கை, 1801 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதி திருச்சி கோட்டையில் ஒட்டப்பட்டது.ஜம்புத்தீவு பிரகடனத்தில் மருது பாண்டியர்கள் தெரிவித்திருந்ததாவது: ”ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத் தீவில் வாழும் அந்தணர்கள், மறையர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், சாம்பவர்கள், முசல்மான்கள் முதலான அனைத்துச் சாதியார்க்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால்நவாபு முகமது அலி முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்து விட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவைபோல் ஆகிவிட்டார்.ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்து வருகிறார்கள்.உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இல்லாத காரணத்தினால், ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ள இயலாமல், உங்களுக்குள் ஒருவரையொருவர் பழிதூற்றிக் கொண்டது மட்டுமின்றி, நாட்டையும் அந்நியரிடம் ஒப்படைத்து விட்டீர்கள்.இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளிலெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழல்கிறார்கள்; சோற்றுக்குப் பதில் நீராகாரம் தான் உணவு என்று ஆகிவிட்டது. இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தாராயவும் புரிந்து கொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும்… ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும்.இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சியிருக்காமல் செய்ய வேண்டும். அப்போது தான் ஏழைகளும் இல்லாக் கொடுமையால் அல்லல்படுவோரும் வாழ முடியும்.அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப் போல சுகவாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக் கட்டப்பட வேண்டும்.மீசை வைத்துக் கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும், அதாவது இராணுவம் அல்லது மற்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால் அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விடவேண்டும். இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்.இதனை ஏற்றுக் கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே, உடம்பில் ஐரோப்பியனின் ரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!இதைப் படிப்பவர்களோ கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள். எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவரிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செய்தவனாகக் கருதப்படுவான்”. என பிரகடனப்படுத்தியிருந்தனர்.சாதி, மத பேதமின்றியும், சிற்றரசர்களை ஒருங்கினைத்து இந்திய துணைக் கண்டம் முழுவதற்கும் விடுதலை வேண்டி எழுத்து பூர்வமாக பிரகடனம் வெளியிட்டனர். இதனால் அச்சமடைந்த அந்நியர்கள் மருது சகோதரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் உட்பட 500க்கும் அதிகமானோரை தூக்கிலிட்டனர்.இவர்களின் தியாகத்தின் நினைவு கூரும் விதமாக ஜம்புத்தீவு பிரகடனத்திற்கு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என தேசபக்தர்கள் கோரி வருகின்றனர். ஜம்புத்தீவு பிரகடனம் சம்மந்தமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்திருப்பதாவது: “மானமும் வீரமும் செறிந்த மருதுபாண்டியர்கள், ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஜம்புத் தீவு பிரகடனம் செய்த வரலாற்றுச் சிறப்புமிக்க தினம் இன்று.1801 ஆம் ஆண்டு, ஜூன் 16 அன்று, ஆங்கிலேயர்களை எதிர்த்து, மக்கள் அனைவரும் போரிட முன்வர வேண்டும் என்று திருச்சி கோட்டையில் போர்ப் பிரகடனம் செய்தார் சின்ன மருது அவர்கள். ஜாதி மத இன வேறுபாடு களைந்து, மக்கள் அனைவரையும் விடுதலைக்காகப் போராடத் தூண்டியது இந்தப் பிரகடனம்.இந்திய சுதந்திரப் போரின் முதல் எழுத்துப் பூர்வமான ஜம்புத் தீவுப் பிரகடனம், தமிழர்கள் என்றும் ஒன்றுபட்ட தேசத்திற்காகக் குரல் கொடுப்பவர்கள் என்பதற்கு, வீரம் நிறைந்த எடுத்துக்காட்டாகும்.மருது சகோதரர்களின் தீரத்தையும், விடுதலைக்காகப் பாடுபட்ட நம் மக்களின் தியாகத்தையும் நினைவு கூர்ந்து போற்றுவோம்.” என பதிவிட்டிருந்தார்.