தமிழகத்தில் திமுக அரசை வீழ்த்துகின்ற சக்தியும், எதிர்த்து போராடுகின்ற சக்தியும், ஙியிறி-க்கு உண்டு என்பதை இன்றைய ஆர்ப்பாட்டத்தின் மூலம் நிரூபித்து காட்டியுள்ளோம் என்றும் ஊழல் மந்திரிகளை ராஜினாமா செய்யச் சொல்லாமல் சட்டத்திற்கு புறம்பாக குடும்ப ஆதாயம் பெறுவதற்காக, தமிழக முதல்வர் ஆட்சி நடத்தி வருகிறார் என்றும் பாஜக மாநிலத் துணைத் தலைவர் டாக்டர் கே.பி. இராமலிங்கம் தெரிவித்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சி சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தில் 322 கிராம ஊராட்சிகள், 5 நகராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளில், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் (23.7.23) நடைபெற்றன.
இதன்படி, இராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளிலும் திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன்படி கோனேரிப்பட்டி, 25 வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வனச்சரக அலுவலகம் அருகே பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி.இராமலிங்கம் தலைமையில், திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது, தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும். மணல் கொள்ளைகளைத் தடுக்க வேண்டும். மத்திய அரசின் மக்கள் திட்டங்களை தடுக்காதே, பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிடுக உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி.இராமலிங்கம், கலந்து கொண்டு திமுக அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன உரையாற்றி பேசினார்.
தமிழ்நாடு அரசு மகளிர் உரிமைத் தொகையை அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் வழங்க வேண்டும். இளைஞர்களை பெரிதும் பாதிக்கும் டாஸ்மாக், கஞ்சா விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். இந்து கோவில்களை இடிக்கக் கூடாது என்றும், ஆன்மீக உணர்வை தடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.
மேலும் அவர், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மணல் கடத்தல் நடைபெறுவதால், இயற்கை வளம் சுரண்டப்படுகிறது. இதனை அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்ந்து விட்டது மின்கட்டணம் அதிகரித்து விட்டது. எனவே மின் கட்டணத்தை குறைத்து மின்வெட்டை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி.இராமலிங்கம், நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய சேலம் பெருங்கோட்டத்தில், 1,735 இடங்களில் திமுக அரசை கண்டித்து இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றன. தமிழ்நாட்டில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஊராட்சி பகுதிகள் 2000க்கும் மேற்பட்ட நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மக்கள் நலன் குறித்து சிறிதும் எண்ணாமல் ஆட்சி செய்து வரும் திமுக அரசு வீழ்த்துகின்ற சக்தியும் எதிர்த்து போராடுகின்ற சக்தியும் பிஜேபிக்கு உண்டு என்பதை இன்றைய ஆர்ப்பாட்டத்தின் மூலம் நிரூபித்து காட்டியுள்ளோம்.
இன்று தொடங்கிய இந்த போராட்டம் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும். தமிழக அமைச்சரவையில் 2 பேர் ஊழல் செய்ததாகத்தான் இப்போது ஆதாரங்கள் வெளிவந்து உள்ளன. மேலும் 13 அமைச்சர்கள் இன்னும் ஓரிரு மாதங்களில் சிறைச்சாலைக்கு செல்வது உறுதி. அவர்கள் அங்கிருந்துதான் மந்திரி சபையை நடத்த வேண்டிய நிலை வரும். இதை நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காகவே இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
அமலாக்க துறையின் நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதில் அளித்த கே.பி. இராமலிங்கம் ஏற்கனவே, பிரதமராக மன்மோகன் சிங் இருந்தபோது கருணாநிதி ஆட்சியில் கனிமொழி, தயாளு உள்ளிட்டோர்மீது அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. அதுபழிவாங்கும் நடவடிக்கை என்றால் இதுவும் பழிவாங்கும் நடவடிக்கை தான்.
ஆனால் ஒருபோதும் அமலாக்கத்துறை ஒருவர் சார்பாக நடந்து கொண்டு திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடாது. திமுக ஆட்சியில் நடந்த 2ஜி ஊழல் மீதான தீர்ப்பு இன்னும் வர வேண்டி உள்ளது.
செந்தில்பாலாஜி மீது வழக்கு போடுவதற்கு முகாந்திரம் கொடுத்தவரே இன்றைய முதல்வர் ஸ்டாலின் தான். அதற்கான ஆதாரம் சட்டமன்ற பதிவுகளில் உள்ளது. போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி ஓட்டுநர், நடத்துநர், மெக்கானிக் பணி நியமனம், ஜிபிஎஸ் கருவி பொருத்துதல் உள்ளிட்ட பணிகளின்போது வாங்கிய லஞ்சம் குறித்து புள்ளி விவரமாக ஏற்கனவே ஸ்டாலின் கூறியுள்ளார்.
இப்போது உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அரசு நிலத்தில் 29 கோடி ரூபாய் அளவிற்கு மண் அள்ளி விற்றுவிட்டு அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாகவும் அன்னிய செலாவணி மோசடி நடந்ததாகவும் குற்றச்சாட்டு உள்ளது. ஏற்கனவே ஆசிரியராக இருந்த ஒருவருக்கு அன்னிய செலாவணி டாலர், பவுண்ட் என பல கோடி ரூபாய் சொத்துக்கள் வந்தது எப்படி என்பது குறித்து ஏற்கனவே வழக்கு போடப்பட்டு அதன் மீதான அமலாக்க துறையின் விசாரணை தான் தற்போது நடந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களால் அவர்களை அமைச்சர்களை கட்டுப்படுத்த முடியாமல் ஸ்டாலின் பயந்து நடுங்கிப்போய் உள்ளார்.
தன்னைப் பற்றியோ தனது அரசை பற்றியோ யாராவது ஊடகத்தில் குறை சொன்னால் அவர்கள் மீது வழக்கு போடுகின்ற சர்வாதிகாரியாகத்தான் முதல்வர் உள்ளார். ஆனால் தன்னுடைய கட்சி நிர்வாகிகளும் அமைச்சர்களோ தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத சர்வாதிகாரியாக உள்ளார்.
தன்னுடைய குடும்ப ஆதாயத்திற்காக தன்னுடைய கட்சியினர் செய்யும் தவறுகளை கண்டிக்காமல், தடுக்காமல் ஜனநாயகத்தை மதிக்காத சர்வாதிகாரியாகவும் உள்ளார்.
ஒரு அரசு ஊழியர் தவறு செய்தால் சிறை சென்ற 48 மணி நேரத்தில் அவரது உயர்அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் ஒரு அமைச்சர் சிறைச்சாலையில் உள்ள நிலையில் தார்மீக பொறுப்பேற்று அவரை ராஜினாமா செய்யச் சொல்லாமல் தமிழக முதல்வர் தமது ஜனநாயக கடமையை செய்யத் தவறிவிட்டார். சட்டத்திற்கு புறம்பாக தமது குடும்ப ஆதாயம் பெறுவதற்காகவே ஆட்சியை பயன்படுத்தி வருகிறார். இதுபோன்ற காரணங்களால் மக்களுக்கான முதல்வர் என்ற தகுதியை ஸ்டாலின் இழந்து விட்டார். ஊழல் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக அவர் இருப்பது அவரது தகுதியை இழந்து விட்டதாகவே அர்த்தம் என்றும் ராசிபுரத்தில் பாஜக மாநில துணைத்தலைவர் டாக்டர் கே.பி. இராமலிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், இராசிபுரம் நகர மற்றும் சுற்றுவட்டார பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.