சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் ஆகிய இருவரின் அதிகார மோதலால், கர்நாடக காங்கிரஸில் குழப்பம் ஏற்படும் என்று மக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் தற்போது மிகப்பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.
அதாவது சில நாட்களுக்கு முன்பு எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் டி.கே.சிவக்குமார் பேசியிருந்தபோது, தேர்தலில் அளித்த ஐந்து முக்கிய அம்ச வாக்குறுதிகளை நிறைவேற்றவே ஏராளமான நிதி ஒதுக்கியாவிட்டது. எனவே இந்த ஆண்டு முழுவதும் பெரிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவது சாத்தியமில்லை என பேசியிருந்தார்.
இவரது பேச்சு எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் மட்டுமின்றி அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. காரணம் கடந்தாண்டு பாஜக அரசு தாக்கல் செய்திருந்த பட்ஜெட் உபரி பட்ஜெட்டாக அமைந்திருந்தது.
இது அரசாங்கத்திற்கு தேவையான செலவுகளை தாண்டி, அரசாங்கம் லாபகரமாக பணத்தை சேமிக்கவும் துவங்கியதற்கான அறிகுறியாகும்.
ஒரு அரசு குறுகிய காலத்திற்கு உபரி பட்ஜெட் தாக்கல் செய்கிறது என்றால், அது சரியான பாதையில் மட்டும் செல்லவில்லை, அசுரப் பாய்ச்சலில் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது என பொதுவாகவே பொருளாதார வல்லுநர்கள் கூறுவார்கள்.
பாஜக அரசு உபரி பட்ஜெட் தாக்கல் செய்திருந்த போது, கர்நாடகா இந்தியாவின் மிகப்பெரிய பொருளாதார வல்லரசு மாநிலமாக மாறும் என அனைத்து மக்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அங்கு எதிர்பாராத விதமாக ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.
பல்வேறு ஆசைகளை மக்களிடம் கூறி காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது. மக்கள் நலத்திட்டம் என்ற பெயரில் ஒரு அரசின் கஜானாவை எப்படி எல்லாம் காலி செய்ய முடியுமோ அப்படி காலி செய்து வருகிறார்கள்.
மக்களுக்கான நலத்திட்டங்களை பாஜக எப்போதும் எதிர்ப்பதில்லை. ஆனால் உண்மையில் அந்த திட்டங்கள் மக்களுக்கு நல்லது செய்யும் திட்டமாக இருக்க வேண்டுமே தவிர, வாக்கு வங்கி அரசியலுக்காகவும், வெறுமனே கஜானாவை காலி செய்வதற்காக மட்டும் இருந்தால், அதனை பாஜக நிச்சயமாக எதிர்க்கும்.
காங்கிரஸ் கட்சியின் மக்கள் நலம் என்ற கோஷம், பார்ப்பதற்கு நன்றாக தெரியலாம். கேட்பதற்கு இனிமையாக இருக்கலாம். ஆனால் வேறு எந்த ஒரு வளர்ச்சி திட்டத்திற்கும் பணம் ஒதுக்க முடியாத அளவிற்கு பணத்தை வாரி இறைப்பது, எந்த ஒரு மாநில நலனுக்கும் நல்லதல்ல.
உதாரணத்திற்கு ஒரு நிறுவனத்தை அரசு தொடங்கினால், அதன் வாயிலாக பெருகும் வேலை வாய்ப்புகளும், வளர்ச்சியும் மக்களை சுயமாக வளரச் செய்யும். இரண்டு மாநிலங்களில் உள்ள ஒரு பெரிய நகரங்களை இணைப்பதற்கு சாலை அமைக்கப்படும்போது, வேலைவாய்ப்பு பெருகுவது மட்டுமின்றி, இரண்டு நகரங்களுக்கான இணைப்பு பல்வேறு அசுர வளர்ச்சிகளை ஏற்படுத்தும். இது போன்ற ஆக்கப்பூர்வமான வளர்ச்சிகளை செய்து கொண்டிருந்த பாஜக ஆட்சியை வீழ்த்த, மக்களை கவரும் வகையில் நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து வாக்குகளை அறுவடை செய்தது மட்டுமே காங்கிரஸின் வேலை.
தற்போது உண்மையான ஆக்கப்பூர்வமான வளர்ச்சிப் பணிகளுக்கு தங்களிடம் பணம் இல்லை என்று கூறும் அளவிற்கு நிதி நிர்வாகத்தை மோசமன நிலைக்கு காங்கிரஸ் கொண்டு சென்றுள்ளது.
இதுவரையில் அமைதிகாத்து வந்த 30 எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய தொகுதிக்கு போதுமான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. தங்களுக்கான நிதி ஒதுக்கீடு போதவில்லை என்ற மனக்குமரலை வெளிப்படையாக பேசி வருகின்றனர். இதுவே ஒரு மாநில நிர்வாகத்தில் மிக ஆபத்தான ஒரு விஷயமாக கருதவேண்டும்.
ஒவ்வொரு தனிப்பட்ட தொகுதியின் வளர்ச்சியை உறுதி செய்வதற்குதான் ஒவ்வொரு எம்.எல்.ஏக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் ஒரு எம்.எல்.ஏ.வாக இருந்துகொண்டு தொகுதிக்கு தேவையான வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்றால்.. அது ஒன்றின் மீது ஒன்றாக மொத்த மாநில நிர்வாகத்தையே சீர்குலைத்துவிடும்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்த மக்கள் மிக குறுகிய காலத்திலேயே அனுபவிப்பது வேதனையாக உள்ளது. எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பாடத்தை மக்கள் கற்றுக்கொடுப்பார்கள் என்பது மாற்றுக்கருத்தில்லை.